Published:Updated:

`சிக்கன், மட்டன் வேணும்னு கேக்குறாங்க!'- டிஎஸ்பி மகனால் நொந்துபோன அமைச்சர் #Corona

அமைச்சர் ராஜேந்தர்
அமைச்சர் ராஜேந்தர்

``வேண்டுமென்றே அலட்சியம் மற்றும் பலருக்கு ஆபத்து விளைவித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அவர்கள் அரசாங்கத்திற்கு செவிசாய்க்காவிட்டால் நாங்கள் நிச்சயமாக வழக்குகளைத் தாக்கல் செய்வோம்.''

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகியுள்ளன. தெலங்கானா மாநிலத்திலும் அதன் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மாநில அரசு நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளன. ஊரடங்கிலிருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறினால் கண்டதும் சுடும் உத்தரவு கொடுக்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். அவரின் கோபத்துக்குக் காரணம் ஒரு அரசு அதிகாரியும், அவரின் மகனும்தான். தெலங்கானா மாநிலம் கோத்தகுடெம் டிஎஸ்பி ஆக பணிபுரிபவர் எஸ்.எம்.அலி. இவரது 26 வயது மகன் கடந்த 18ம் தேதி லண்டனிலிருந்து ஹைதராபாத் வந்தார்.

டிஎஸ்பி மகன்
டிஎஸ்பி மகன்

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற அந்த விதியை மீறி பயண விவரங்களை மறைத்ததுடன் வீட்டுக்குச் சென்றவர், அங்கேயே இருக்காமல் ஊர் சுற்றியுள்ளார். லண்டனிலிருந்து திரும்பிய மறுநாளே, ஆந்திராவின் மேற்கு கோதாவரி, சிந்தாலாவில் நடந்த ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டார். இப்படி இவர் அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்பட, அவர் தந்தையும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அலியின் மகனுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த இளைஞருக்கு மட்டுமல்ல டிஎஸ்பி அலிக்கும், அவர்களில் வீட்டில் சமையல் வேலை செய்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மட்டுமல்ல, அவருடன் தொடர்பில் இருந்த 22 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அவரை அரசு அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்காக அவர் வீட்டில் இருந்து ஹைதராபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுகூட, டிஎஸ்பியின் மகன் முழு உடல் உடையில் ஆம்புலன்சில் நுழையும்போது, அவரது உடமைகளை இரண்டு போலீஸ்காரர்கள் வாயில் கட்டப்பட்ட கைக்குட்டைகளுடன் கொண்டு சென்றனர். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவர் மட்டுமல்ல; கடந்த வாரம், அமெரிக்காவிலிருந்து தனது மனைவியுடன் திரும்பிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ கொனேரு கொனப்பா, செகந்திராபாத்திலிருந்து தனது சொந்த ஊரான ககாஸ்நகருக்கு ரயிலில் சென்றார். எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் கைகுலுக்கி, நகராட்சி மன்றக் கூட்டங்கள் மற்றும் மத நிகழ்வுகளில் கலந்து கொண்டார் - இவை அனைத்தும் 14 நாள் தனிமைப்படுத்தலில் அவர் வீட்டில் இருக்க வேண்டிய ஒரு காலத்தில். இப்படி அடுத்தது நிகழ்வுகள் அரங்கேறவே இப்படி கோபம் கொந்தளிக்கப் பேட்டி கொடுத்துள்ளார் அமைச்சர் ராஜேந்தர்.

``வேண்டுமென்றே அலட்சியம் மற்றும் பலருக்கு ஆபத்து விளைவித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அவர்கள் அரசாங்கத்திற்கு செவிசாய்க்காவிட்டால் நாங்கள் நிச்சயமாக வழக்குகளை தாக்கல் செய்வோம். இது ஒரு தனிப்பட்ட பிரச்னை அல்ல; இது முழு தேசத்தின் மனிதர்களின் பாதுகாப்பைப் பற்றியது", என்றவர், வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் பற்றிப் பேசினார். ``நீங்கள் அனைவரும் படித்தவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதால், வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கான வாய்ப்பை நாங்கள் உங்களுக்கு வழங்கினோம்.

அமைச்சர் ராஜேந்தர்
அமைச்சர் ராஜேந்தர்

தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் குடும்பத்தினரிடமும் பெற்றோரிடமும் அவர்களின் அறைகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களில் சிலர், நன்றாக இருக்கிறார்கள், சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சி போன்ற அபத்தமான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அவற்றை நாங்கள் வழங்குவோம். ஆனால் இது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்பதை அவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு