உத்தரப்பிரதேச மாநிலம், மகாராஜ்பூர் பகுதியிலுள்ள சத்மாரா சந்திப்பில், பிரகாஷ் சிங் என்ற காவலர் கடந்த சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் நிதின் சிங் என்பவர் தூங்கிக்கொண்டிருந்தார். அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிரகாஷ் சிங் தூங்கிக்கொண்டிருந்தவரிடம் மொபைல் போனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் அந்தக் கடையின் சிசிடிவி காட்சிகளைச் சோதித்ததில் குற்றவாளி பிரகாஷ் சிங் திருடும் காட்சி பதிவாகியிருந்தது. அதை அப்படியே சமூக வலைதளங்களில், ``திருடனைப் பிடிக்கவேண்டிய காவல்துறை அதிகாரியே திருடுகிறார்" எனப் பதிவிட்டு பகிரப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கூடுதல் எஸ்.பி விஜேந்திர திவேதி, "காவல்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தைப் பற்றி விசாரித்தனர். அவர் மகாராஜ்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பிரகாஷ்சிங் என அடையாளம் காணப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் ஊர்க்காவல் படை வீரர் ஒருவரும் சம்பவ இடத்தில் இருந்தார். ஊர்க்காவல் படை வீரர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.