Published:Updated:

நாரதா வழக்கு: அமைச்சர்களைக் கைதுசெய்த சிபிஐ; `என்னையும் கைதுசெய்யுங்கள்!’ -ஆவேச மம்தா |நடந்தது என்ன?

சி.பி.ஐ அலுவலகத்தில் மம்தா
சி.பி.ஐ அலுவலகத்தில் மம்தா ( ANI )

``ஆளுநர் இது போன்று அனுமதி அளித்தது சட்டவிரோதம். ஆளுநர் அனுமதியின் பெயரில் எம்.எல்.ஏ-க்களைக் கைதுசெய்ததும் சட்டவிரோதம்” எனக் கடுமையாகக் குற்றம்சாட்டினார் சபாநாயகர்.

நாரதா வீடியோ டேப் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், மேற்கு வங்க அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ-க்களை அதிரடியாகக் கைதுசெய்தது மத்திய புலனாய்வுத்துறை. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நேரடியாக சி.பி.ஐ அலுவலகத்துக்கே சென்று "என்னையும் கைதுசெய்யுங்கள்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போது, `நாரதா நியூஸ்’ எனும் இணையதள ஊடகத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் போலி நிறுவன அதிகாரிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதைப் போன்ற வீடியோக்கள் வெளியாகின. `நாரதா ஸ்டிங் ஆபரேஷன்’ எனும் பெயரில் தெஹல்கா ஊடகத்தின் மூத்த பத்திரிகையாளர் மேத்திவ் சாமுவேல் நடத்திய இந்த அண்டர்கவர் ஆபரேஷனில், தன்னை ஒரு தொழிலதிபர் என்றும், தன்னுடைய இம்பெக்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்துக்கு ஆதரவாக சில வேலைகள் செய்து தருமாறும் கூறி திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் கொடுத்து, அதைத் தங்களின் ரகசிய கேமராவில் பதிவுசெய்தனர். அந்த வீடியோக்களை naradanews.com என்ற பெயரில் இணையத்தில் வெளியிட்டு, 2016 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இருப்பினும், அந்தத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 2017-ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள் முகுல் ராய், சுல்தான் அகமது, சவுகதா ராய், ககோலி கோஷ், அபாரூபா போதர், அமைச்சர்கள் சுப்ரதா முகர்ஜி, பிர்ஹத் ஹக்கிம், மதன் மித்ரா, எம்.எல்.ஏ-க்கள் இக்பால் அகமது, சோவன் சாட்டர்ஜி, ஐ.பி.எஸ் அதிகாரி மிர்ஸா உட்பட 13 பேர் மீது சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தது.

தற்போது, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ். கடந்த மே 7-ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மம்தாவுடன் சேர்த்து, நாரதா டேப் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுப்ரதா முகர்ஜி, பிர்ஹத் ஹக்கிம் உள்ளிட்டோரும் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதோடு, நாரதா லஞ்ச வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சி.பி.ஐ சமர்ப்பித்த ஆவணங்களைப் பரிசீலனை செய்து, அவர்கள் மீது சி.பி.ஐ சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மம்தா பானர்ஜி - ஜகதீப் தன்கர்
மம்தா பானர்ஜி - ஜகதீப் தன்கர்
Jagdeep Dhankar / Twitter

இந்தநிலையில், இன்று காலை சம்பந்தப்பட்டோர் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்திய சி.பி.ஐ., அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ மதன் மித்ரா மற்றும் முன்னாள் அமைச்சர் சோவன் சட்டர்ஜி ஆகிய நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லும்போது, அமைச்சர் பிர்ஹத் ஹாக்கீம், “நாரதா வழக்கில் சி.பி.ஐ எங்களைக் கைதுசெய்துள்ளது. விசாரணை பற்றிய எந்த பயமும் எனக்கில்லை. நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை எதிர்கொள்வோம். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் நாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிப்போம். இந்த நடவடிக்கைக்குப் பின்னால் பா.ஜ.க உள்ளது" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சர்களின் கைதையடுத்து, ஆவேசமடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, நேரடியாக கொல்கத்தா நிஜாம் பேலஸில் இருக்கும் சி.பி.ஐ அலுவலகத்துக்கு விரைந்தார். அங்குள்ள சி.பி.ஐ அதிகாரிகளிடம் பேசிய மம்தா, ``சபாநாயகர் மற்றும் மாநில அரசின் அனுமதியின்றி அமைச்சர்கள், அதிகாரிகளைக் கைது செய்ய என்ற எந்த விதியும் இல்லை. எங்கள் அதிகாரிகள், அமைச்சர்களைக் கைதுசெய்தால், என்னையும் கைதுசெய்ய வேண்டும்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், சி.பி.ஐ அலுவலகத்தின் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சி.பி.ஐ அலுவலகம் முன் குவிந்த மம்தா ஆதரவாளர்கள்
சி.பி.ஐ அலுவலகம் முன் குவிந்த மம்தா ஆதரவாளர்கள்

மேலும் இது குறித்துப் பேசிய மேற்குவங்க சபாநாயகர் பிமான் பானர்ஜி, ``அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களிடம் விசாரணை குறித்தோ, அல்லது கைது குறித்தோ எந்தவிதமான அனுமதியும் கேட்டு சி.பி.ஐ என்னிடம் கடிதமும் கொடுக்கவில்லை. சபாநாயகர் பதவி காலியாக இல்லாதபோது, நான் அலுவலகத்தில் இருக்கும்போதும்கூட, எந்த அடிப்படையில் சி.பி.ஐ அதிகாரிகள் ஆளுநரிடம் சென்றார்கள்?” எனக் கேள்வி எழுப்பியவர், ``ஆளுநர் இதுபோன்று அனுமதி அளித்தது சட்டவிரோதம். ஆளுநர் அனுமதியின் பெயரில் எம்.எல்.ஏ-க்களைக் கைதுசெய்ததும் சட்டவிரோதம்” எனக் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

ஏற்கெனவே,தேர்தல் முடிவுகளுக்குப் பின் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பா.ஜ.க-வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறி உயிரிழப்புகளும் நடைபெற்றன. இது குறித்து முதல்வர் மம்தாவின் பதவிப் பிரமாண மேடையிலேயே வைத்து, ஆளுநர் ஜக்தீப் தன்கர், "மேற்கு வங்கத்தில் சீர்கெட்டுள்ள சட்ட ஒழுங்கைச் சரிசெய்ய வேண்டும்" என மரபுக்கு மாறாக முதல்வரிடம் அறிவுரை வழங்கினார். அதற்கு மம்தா பதிலடியும் கொடுத்தார். அதன் பின்னர், மம்தாவின் எதிர்ப்பையும் மீறி, தேர்தலுக்குப் பின் கலவரம் நடந்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்ற ஆளுநர், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது” எனக் கடுமையாக மம்தாவைச் சாடினார். "வழக்கத்துக்கு மாறான ஆளுநரின் தன்னிச்சையான முடிவு இது’’ என ஆளுநரின் ஆய்வை கடுமையாக எதிர்த்துப் பேசினார் முதல்வர் மம்தா.

மம்தா பானர்ஜி-  ஜக்தீப் தன்கர்
மம்தா பானர்ஜி- ஜக்தீப் தன்கர்
Jagdeep Dhankar / Twitter

தொடக்கம் முதலே, மம்தா முதல்வராகப் பதவியேற்றது தொடங்கி, தொடர்ச்சியாக ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நடந்துவருகிறது. இந்தநிலையில் ஆளுநர் ஜக்தீப் தன்கர் அனுமதி வழங்கியதன் பெயரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட நன்கு பேரை சி.பி.ஐ கைது செய்திருப்பது அம்மாநில அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடம் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

மேற்கு வங்கம்: "என்னைத் துப்பாக்கியால் சுட்டாலும்..." - முதல்வர் மம்தா Vs ஆளுநர் ஜகதீப் தன்கர்
அடுத்த கட்டுரைக்கு