Published:Updated:

`டிவிஎஸ் ரூ.30 கோடி; பிசிசிஐ ரூ.51 கோடி!’ - கொரோனா பாதிப்புக்குக் குவியும் நிதிகள்

டிவிஎஸ், பிசிசிஐ
டிவிஎஸ், பிசிசிஐ

கொரோனா நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ பிரதமர் அழைப்பு விடுத்த நிலையில், நிதி குவிந்து வருகிறது.

கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 900-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் கணிசமான நிதியுதவியை அறிவித்துவருகின்றன.

தெலுங்கு நடிகர்கள்
தெலுங்கு நடிகர்கள்

வைரஸ் பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மருத்துவ வசதிகளுக்காகவும் பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் எனப் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதையேற்று பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த நிதியை அரசுக்கு கொடுத்தும் பொருள்களாக மக்களுக்கே நேரடியாக வழங்கியும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார். அதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 51 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.

தெலுங்கு திரைப்பட நடிகரான பிரபாஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கூறியுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 1.25 கோடி, பவன் கல்யாண் ரூ. 2 கோடி, சிரஞ்சீவி ரூ. 1 கோடி, மகேஷ் பாபு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஹிர்திக் ரோஷன் போன்ற பலரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் நடிகர்கள்
தமிழ் நடிகர்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறை கலைஞர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ரூ.10 லட்சம், சூர்யா ரூ 10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சமும் நிதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் வரிசையில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.30 கோடி செலவிடவுள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் சுந்தரம் கிலேடன் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் முதல்கட்ட நடவடிக்கையாக ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய நகராட்சிகளில் கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்ட 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 10 லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணிகளிலும் டிவிஎஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பிரபலங்களைத் தாண்டி சாதாரண பொதுமக்களும் 100 ரூபாய் முதல் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு