Published:Updated:

மீண்டும் கட்டப்படும் குரு ரவிதாஸ் கோயில் - ஒப்புக்கொண்ட மத்திய அரசு!

அயோத்தியில் பாபர் மசூதியா - ராமர் கோயிலா என்கிற விவாதமே மூன்று தசாப்தங்களாக முடிவுறதா நிலையில், டெல்லியில் மற்றுமொரு கோயில் தொடர்பான சர்ச்சை உருவாகித் தணிந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லி துக்ளகாபாத்தில் அமைந்திருந்தது, சீக்கிய மத போதகரான குரு ரவிதாஸ் கோயில். 15-வது நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இயக்கத்தின் முன்னோடியான குரு ரவிதாஸ், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் உழைத்தவர். தலித் மக்களின் தலைவராக விளங்குகிற குரு ரவிதாஸ் நினைவாக எழுப்பப்பட்டிருந்த டெல்லி கோயில், தலித் மக்களின் முக்கியமான புனிதத் தலமாகப் பார்க்கப்படுகிறது.

குரு ரவிதாஸ் கோயில்
குரு ரவிதாஸ் கோயில்
Hindustan Times

இந்நிலையில், குரு ரவிதாஸ் கோயில் அமைந்துள்ள இடம் வனப்பகுதியின்கீழ் வருவதாகவும், ஆக்கிரமிப்பு நிலத்தில் அமைந்துள்ள கோயிலை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வழக்கொன்று நீண்டகாலமாக நடந்துவந்தது. அதில், கோயிலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்கிற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. இதை எதிர்த்து கோயிலை நிர்வகிக்கிற ரவிதாஸ் ஜெயந்தி சமோரா சமிதி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அருண் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு விசாரித்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்குத் தடைவிதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், காவல் துறையினரின் உதவியோடு கோயிலை இடிக்க டெல்லி வளர்ச்சிக் குழுமத்திற்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10-ம் தேதி குரு ரவிதாஸ் கோயில் இடிக்கப்பட்டது. இது, தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோயில் இடிக்கப்பட்டதை எதிர்த்து வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. டெல்லி வளர்ச்சிக் குழுமம் மத்திய அரசின்கீழ் வருவதால், மத்திய பாரதிய ஜனதா அரசு தலித் மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகத் தாக்கின. டெல்லி சட்டப்பேரவையில், “இடிக்கப்பட்ட இடத்திலேயே குரு ரவிதாஸ் கோயில் கட்டித்தரப்பட வேண்டும்” என ஆம் ஆத்மி அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

கோயில் இடிக்கப்பட்டபோது நடைபெற்ற போராட்டம்
கோயில் இடிக்கப்பட்டபோது நடைபெற்ற போராட்டம்
Hindustan Times

பஞ்சாப் முதல்வர் அம்ரேந்தர் சிங் தொடங்கி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரை குரு ரவிதாஸ் கோயில் மீண்டும் கட்டுவதற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். இதனால் கோயில் நிலம் தொடர்பான பிரச்னை, பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுக்கத் தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தில் குரு ரவிதாஸ் கோயிலை மீண்டும் கட்டித்தர வேண்டும் என வழக்குகளும் தொடரப்பட்டன. 'சர்ச்சைக்கு இணக்கமாகத் தீர்வு காணுங்கள்' என அந்த மனுக்கள்மீது உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட மத்திய அரசு, கோயில் இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் புதிதாகக் கட்டித்தர முடிவுசெய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குரு ரவிதாஸ் கோயில் அமைந்திருந்த இடம், அதீத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதற்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியிருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், கோயில் முன்பிருந்த இடத்திலேயே 400 சதுரஅடி இடம் ஒதுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு அனுமதியளித்துள்ள உச்ச நீதிமன்றம், கட்டுமானத்தை மேற்பார்வையிட ஆறு வாரத்திற்குள் குழுவொன்றை அமைக்க வேண்டுமென்றும், கோயில் இடத்தைச் சுற்றி வேறெந்த வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

மத நம்பிக்கை தொடர்பான இடங்களில், தேவையற்ற சர்ச்சைகளும் அரசியல் சாயங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையே குரு ரவிதாஸ் கோயில் சர்ச்சை மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

40 நாள் விசாரணை... 144 தடை உத்தரவு... என்ன நடக்கும் அயோத்தி வழக்கில்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு