Published:Updated:

கொரோனா தடுப்பில் மத்திய அரசு சொல்லும் `ஆக்ரா மாடல்' - ஹாட்ஸ்பாட் நகரம், மாடல் நகரமானது எப்படி?

 ஆக்ரா  தாஜ்மகால்
ஆக்ரா தாஜ்மகால்

ஆக்ராவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 76 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். 38 இடங்கள் ஹாட்ஸ்பாட்டாக இருக்கிறது. இருந்தாலும் மத்திய அரசு ஆக்ரா மாடலைப் பின்பற்ற சொல்வது ஏன்?

கொரோனா தடுப்பில் அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் மிக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனா ஹாட்ஸ்பாட்டாக அறியப்படும் இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் தினமும் மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அப்போது கொரோனா தடுப்பில் நாடு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசுவதுடன் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் அறிவுரைகள் தொடர்பாகவும் பேசுவார். அப்படி கடந்த சனிக்கிழமை பேசுகையில் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பில் ஆக்ரா மாடலை பின்பற்ற வேண்டும் என்றார்.

லாவ் அகர்வால்
லாவ் அகர்வால்

தற்போதுவரை கொரோனாவால் ஆக்ராவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 76 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார் (அவர் ஒரு ஆஸ்துமா நோயாளியும் கூட). 38 இடங்கள் ஹாட்ஸ்பாட்டாக இருக்கிறது. இருந்தாலும் மத்திய அரசு ஆக்ரா மாடலை பின்பற்றச் சொல்வது ஏன்? ஆக்ராவில் கொரோனா தடுப்பில் அம்மாவட்ட நிர்வாகம் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பாட்டுள்ளது என்பதை விரிவாகப் பார்க்கலாம்...

``பிப்ரவரி மாதம் 25-ம் தேதி டெல்லியைச் சேர்ந்த ஒருவர் நபர் இத்தாலி நகரில் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு ஆக்ரா வந்தார். அதன் பின்னர் 5 தினங்கள் கழித்து, அதாவது மார்ச் மாதம் 2-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கும் இவர் மூலமாக 6 பேருக்குக் கொரோனா பரவி இருந்தது மார்ச் 3-ம் தேதி உறுதி செய்யப்பட்டது” என்கிறார் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பிரபு சிங். அப்போது நாடு முழுவதும் சுமார் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். மார்ச் மாதத்தின் தொடக்கத்திலே 6 பேர் பாதிக்கப்பட்டு இருந்தும், மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 12 என்ற கணக்கிலே இருந்தது. அதிலும் 8 பேர் அப்போது மீண்டு வீட்டுக்குத் திரும்பி இருந்தனர். ஏப்ரல் மாதம் டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட சிலருக்கு அறிகுறிகள் தெரிய வரவே, ஆக்ராவில் எண்ணிக்கை உயர்ந்தது. தற்போது இருக்கும் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி பேர் டெல்லி மாநாட்டோடு தொடர்புடையவர்கள்.

குவாரன்டைன்
குவாரன்டைன்

ஆக்ராவில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு குழுக்களைக் களமிறக்கி இருந்தது. ஒரு பகுதியில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தப் பகுதியைச் சுற்றிய 3 கிலோ மீட்டர் தூரம் கன்டெயின்மென்ட் பகுதியாக அறிவிக்கப்படும். அந்தப் பகுதிகள் உள்ள அனைவருக்கும் கட்டாயம் நேரடி ஸ்க்ரீனிங் பரிசோதனைகள் நடத்தப்படும். அதில் இருமல், காய்ச்சல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனியில் இருக்கும் தனிமைப்படுத்தப்படும் வார்டுக்கு மாற்றப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படும். அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் ஹோம் க்வாரன்டீன் கட்டாயம். இப்படி மாவட்டம் முழுவதும் வீட்டுக்கே சென்று பரிசோதனைகள் நடத்த 1,248 குழுக்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு செவிலியர், தன்னார்வலர் மற்றும் ஒரு அங்கன்வாடி ஊழியர் என மூன்று பேர் இருப்பார்கள். இந்தக் குழுக்கள் மாவட்டத்தில் தற்போது வரையில் 9.3 லட்சம் மக்களை நேரடியாகச் சந்தித்துள்ளது. இவர்களில் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா அறிகுறியுடன் இருந்ததை இந்தக் குழு கண்டுபிடித்தது. இதனால் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, பெரும்பாலும் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்தனர். இதனால் சமூக பரவல் என்னும் கட்டத்தை ஆக்ரா நகரம் அடையவில்லை.

மேலும் வெளிநாடு சென்று வந்தவர்கள் அனைவரும் மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் தானாக முன்வந்து பரிசோதனைகள் செய்ய வேண்டும். தவறினல் சட்டரீதியாக நடவடிக்கைகள் பாயும் என எச்சரித்தது மாவட்ட நிர்வாகம். இதன் மூலம் வெளிநாடு ட்ராவல் ஹிஸ்டரி கொண்ட அனைவரும் மார்க் 30-ம் தேதிக்குள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் கடந்த நாள்களில் எங்கு என்கு சென்றார் என்பதை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அதன் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து கன்டெயின்மென்ட் பகுதியில் இருக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளி வர தடை விதிக்கப்பட்டது. இதை சிசிடிவி கேமரா மூலமும் ட்ரோன் மூலமும் காவலர்கள் கண்காணிக்கிறார்கள். அத்தியாவசிய பொருள்கள் மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மூலமும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மூலமும் டோர் டெலிவரி செய்யப்படுகிறது.

டோர் டெலிவரி
டோர் டெலிவரி

இது தவிர ஹாட்ஸ்பாட்டாக அறியப்படும் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் கூட்டம் எந்த வகையிலும் அனுமதிக்கப்படுவதில்லை. சிசிடிவி கேமரா மூலம் எங்காவது கூட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக லோக்கல் காவல் நிலைத்துக்கு சொல்லப்படும். மீதியை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். இது தவிர பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் ட்ராவல் ஹிஸ்டரி அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதுடன் கூடுதலாக, கேமரா மூலமும் அவர் சென்ற இடங்கள் உறுதி செய்யப்பட்டு அதன் மூலம் ஜிபிஸ் வரைபடம் உருவாக்கி, அந்தப் பகுதிகளில் இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டனர். தற்போது வரை மாவட்டத்தில் 38 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டாக அறியப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர் குணமடைந்து, அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனைகள் முடிந்த பின்னர், அறிகுறிகளுடன்கூட யாரும் இல்லை என்ற நிலையில் அந்தப் பகுதியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அப்படி தற்போது வரை 10 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மீதம் இருக்கும் 28 பகுதிகளில் இன்னும் கட்டுப்பாடுகள் தொடர்கிறது.

இது தவிர சில தனியார் ஹோட்டல்கள் தனிமைப்படுத்தும் மையமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இங்கு கட்டணம் உண்டு. வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வந்தவர்கள் அறிகுறிகள் தென்படாமல் இருந்தாலும் தங்கள் குடும்பத்தினருக்கு பரவாமல் இருக்க வேண்டும் என நினைத்தால் இந்த ஹோட்டல்களில் தங்கலாம். இப்படி 566 கட்டணங்களுடன் கூடிய 3 ஸ்டார் ஹோட்டல் அறைகள் ஆக்ராவில் தயார் நிலையில் இருக்கிறது. இது தவிர் தனியார் ஹோட்டல்களில் சுமார் 3,000 அறைகள் சுகாதாரப் பணியாளர்களுக்கும் மற்ற குழுக்கள் சார்ந்தவர்களுக்கும் இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கள் பணி காரணமாக தங்கள் குடும்பத்தினர்களுக்கு பரவி விடக்கூடாது என்பவர்கள் இந்த ஹோட்டல்களில் தங்கிக்கொள்ளலாம்.

கொரோனா
கொரோனா

இதெல்லாம் வீடுள்ளவர்களுக்கு சரி... வீடில்லாதவர்களுக்கு.... அதற்கும் தனியாகக் குழுக்கள் அமைத்து சாலை ஓரத்தில் வசிக்கும் அனைவருக்கும் உணவுகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உறுதி செய்து வருகிறது. மேலும் பறவைகள். விலங்குகள் முதலியவற்றிக்கு உணவுகள் வழங்கவும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பணிகள் இன்னும் முடிந்து விடவில்லை, தற்போது அடுத்தகட்டமாகக் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் சிலர் தினமும் நகர்ப்புறங்களில் வேலைக்கு வந்து செல்வதாக இருக்கிறார்கள். இவர்களின் தகவல்கள் பெற்று, அவர்களுக்கும் அவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் என பரிசோதனை விரிவுபடுத்தப்பட உள்ளது. இது பெரும் சவால்தான், என்றாலும் செய்து முடிப்போம் என்கிறார் மாவட்ட சுகாதார அதிகாரி முகேஷ் குமார்.

ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா; 60 ஆக உயர்ந்த எண்ணிக்கை! - கலங்கும் திருப்பூர்

ஆக, மொத்தத்தில் ஆக்ரா மாடல் என்பது, கணக்கெடுப்பு, தனிமைப்படுத்துதல், தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு, விரிவுப்படுத்தப்படும் பரிசோதனை வளையம், கூடுதல் தேவைக்கு தன்னார்வலர்கள்..!

அடுத்த கட்டுரைக்கு