`ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சில யூனியன் பிரதேசங்களில் மட்டும் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டை (ஹெல்த் ஐடி) கொடுக்கப்படும். ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் ஒருவருக்கான சுகாதார அடையாள எண்ணை எளிதாக உருவாக்க முடியும். இது ஒருவரின் மருத்துவ தகவல்களை பாதுகாக்க பயன்படுத்தபடுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதாவது, ஒரு நபர் என்ன சிகிச்சை எடுத்து கொண்டார், எங்கு எடுத்து கொண்டார் போன்ற விவரங்கள் இதில் பதிவு செய்யப்படும். இந்த எண்ணை வைத்து எங்கு எப்போது வேண்டுமானாலும் நம்முடைய பழைய சிகிச்சை விவரங்களை எடுத்து கொள்ளலாம்.
இது ஒருவரின் சிகிச்சை விவரங்களை பாதுகாப்பாக வைப்பதோடு, ஒரு தனி நபரின் மருத்துவ ஆவணமாகவும் இருக்கும். எனவே ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு செல்லும் போது நம்முடைய எல்லா ஆவங்களையும் கொண்டுபோக வேண்டிய அவசியமில்லை, எந்த நாட்டிலும் எந்த இடத்திலிருந்தும் இந்த சுகாதார அடையாள அட்டை மூலமாக நம்முடைய சிகிச்சை விவரங்களை எடுத்து கொள்ளலாம்.
எனவே, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நாடு முழவதும் இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த 1,600 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த திட்டம் தேசிய சுகாதார ஆணையம் மூலம் அமல்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நடத்திய 5-வது வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``மத்திய அரசு கொண்டு வந்த `கோவின்’ மற்றும் `ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்’ திட்டங்கள் மூலம் மக்கள் எளிதாக சிகிச்சை பெறுவதோடு, மருத்துவ துறையினரும் எளிதாக சிகிச்சை அளிக்க முடிகிறது" என கூறினார்.