இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக சாலை விபத்துக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. அடையாளம் தெரியாத வாகனங்கள் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்வது தொடர்ந்து நிகழ்கின்றன. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசுகையில், ``2019-ம் ஆண்டு டெல்லியில் மட்டும் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி தப்பிச் சென்றதில், 536 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்லும் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புக்கு 25,000 ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 12,500 ரூபாயும் இழப்பிடாக வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இந்த இழப்பீட்டை அதிகரிக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டதைத் தொடர்ந்து, இதற்கான வரைவு திட்ட அறிக்கை, ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிடப்பட்டது. மக்களிடமும் இது குறித்து கருத்து கேட்கப்பட்டு, அந்த கருத்துகளின் அடிப்படையில் இழப்பீடு திட்டத்திற்கு `அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்போர் இழப்பீட்டுத் திட்டம்' என்று பெயரிப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பாணையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கான இழப்பீடு தொகையானது 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரூ.25,000-ல் இருந்து ரூ.2 லட்சமாக இழப்பீடு தொகை உயர்த்தப்பட்டது. அதேபோல, படுகாயம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு தொகையும் 4 மடங்கு உயர்த்தப்பட்டது. படுகாயம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12,500-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு தொகையை வழங்க `மோட்டார் வாகன இழப்பீட்டு நிதியம்' மத்திய அரசால் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய இழப்பீடு திட்டம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.