Published:Updated:

`மே 3 டார்கெட்; சிறப்பு விமானங்கள்!’ - வெளிநாடுவாழ் இந்தியர்களை மீட்க மத்திய அரசின் திட்டம்

வெளிநாடுவாழ் இந்தியர்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ( AP | Manish Swarup )

வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவதற்கு காத்துக்கொண்டிருப்பவர்களின் பட்டியலையும் தயார் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

உலக நாடுகளைக் கலங்கடித்துக்கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்குதல் யாரும் எதிர்பார்க்காததே, சீனாவில் ஒரு மூலையில் பரவத் தொடங்கிய நோய் இன்று உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடராகக் கருதப்படும் கொரோனா நோய் தாக்குதல் மனித குலத்தை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் உயிர்க் கொல்லி நோய்க்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கிய கொரோனா வைரஸ் 4 மாதங்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்திருக்கிறது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே காணப்பட்ட கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவுவதற்கு முதன்மை காரணமாக அனைவரும் கூறுவது விமான போக்குவரத்தைத்தான், விமானப் பயணங்கள் மூலமாகத்தான் ஓர் நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாக மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் உலக அளவில் சர்வதேச விமான சேவைகள் முடக்கப்பட்டன.

அதன் காரணமாக இந்தியாவில் இருந்து வேலை காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் இந்த இக்கட்டான சூழலில் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த ஒருமாத காலமாகக் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனாவின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் வரும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது, குறிப்பாக, மக்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கும் தடை விதித்துள்ளது.

இந்தியர்கள்
இந்தியர்கள்
AP | Manish Swarup

வளர்ந்த நாடுகள் பலவும் நோய் பாதிப்பில் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வளரும் நாடான இந்தியாவிலும் கொரோனா நோய் தீவிரம் அடைந்திருக்கிறது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கடந்த 14-ம் தேதியுடன் முடிவடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு ஊரடங்கை அடுத்த மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

அனைத்து தொழிற்துறைகளும் மூடப்பட்டு நாடு கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.

அதேநேரம், மத்திய அரசு வெளிநாடுகளில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்டுத் தாயகம் அழைத்து வரும் முயற்சிகளில் களம் இறங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் பாதிப்பு நிறைந்துள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்திலும் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் அங்கு வேலைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். அப்படி வெளிநாடுகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள்
AP | Manish Swarup

பிரதமர் மோடி தலைமையில் ஒருவார காலமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் பலனாகக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பது குறித்த பணிகளை அதிகாரிகள் தொடங்கி இருக்கின்றனர். அதன் விளைவாக அடுத்த மாதம் 3-ம் தேதிக்குப் பிறகு சிறப்பு விமானங்களின் மூலம் அவர்களை மீட்டு அவரவர் சொந்த மாநிலங்களுக்கே கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காணொலிக்காட்சி மூலம் மாநில அதிகாரிகளுடன் அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கௌபா ஆலோசனையை நேற்று நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. அதன்படி, மே மாதம் 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு முடிந்த உடன் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்க உள்ளதாகவும் அதற்காக மருத்துவமனைகளில் தனி படுக்கையறைகள் மற்றும் வருபவர்களைத் தனிமைப்படுத்தி வைக்க ஏதுவான அறைகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அவர் மாநில அரசுகளை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தியா
இந்தியா
AP | Mahesh Kumar A

மேலும், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்களை அவரவர் சொந்த மாநிலத்தில் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ளே உள்நாட்டு விமான நிலையங்களிலேயே இறக்கிவிடப்படுவார்கள் என்றும் இறக்கிவிடப்பட்ட உடன் அங்கிருந்து அவர்கள் அழைத்து செல்லப்பட்டு குறைந்தது 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவதற்கு காத்துக் கொண்டிருப்பவர்களின் பட்டியலையும் தயார் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. அந்தப் பட்டியலுக்கு ஏற்றாற்போல் மாநில அரசுகளை அலர்ட் செய்ய முடிவெடுத்துள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குத்தான் அதிகளவில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா விவகாரத்தை  நாட்டோடு நாடு ஒப்பிடுவது  சரிதானா?

கடந்த மாதம் மார்ச் 22 முதல் அனைத்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்ப முயன்றவர்களால் முடியாமல்போனது. அதிலிருந்துதான், மத்திய அரசுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை மீட்க வலியுறுத்தி அழுத்தம் அளித்து வருகின்றனர். இந்தநிலையில் தான் மத்திய அரசு தற்போது அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் களம் இறங்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு