Published:Updated:

`அயோத்தி தீர்ப்பு; சோம்நாத் கோயில்!' - அறக்கட்டளை பணிகளைத் தொடங்கும் மத்திய அரசு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அயோத்தி
அயோத்தி ( தே.அசோக்குமார் )

அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மோடி, அமித்ஷா
மோடி, அமித்ஷா

இதையடுத்து, ராமர் கோயில் அறக்கட்டளை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று தெரிகிறது. இதற்கான பணிகளை மத்திய கலாசார துறை அமைச்சகம் முன்னெடுக்கும் என்கிறார்கள், மத்திய அரசு அதிகாரிகள். சோம்நாத் கோயில் அறக்கட்டளையைப் பின்பற்றி, ராமர் கோயில் விவகாரத்தில் அதேபோன்றதொரு அறக்கட்டளையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோம்நாத் கோயில் அறக்கட்டளையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித் ஷா உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

மேலும், பா.ஜ.க-வின் மூத்த தலைவரான அத்வானி, குஜராத் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் படேல், ஓய்வுபெற்ற குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளர் பிரவீன் லஹெரி, தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் மற்றும் பேராசியர் ஜிவன்பாய் பார்மர் ஆகியோர் அந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள். இதேபோன்றதொரு அறக்கட்டளை விரைவில் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

அயோத்தி
அயோத்தி

இதுகுறித்து ஏ.என்.ஐ ஊடகத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரிகள், ''அறக்கட்டளை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அடுத்த வாரம் அழைப்பு விடுப்பார் என்று நினைக்கிறோம். அந்தக் கூட்டத்தில் அறக்கட்டளை அமைப்பது, விதிகள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும். மத்திய கலாசார துறையின் கீழ் அந்த அறக்கட்டளை செயல்படும்'' என்று கூறியிருக்கிறார்கள்.