Election bannerElection banner
Published:Updated:

`6 மணி நேரக் காத்திருப்பு; செருப்பு, முட்டை வீச்சு!’- ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

விசாகப்பட்டினம் வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் விமான நிலையத்தில் குவிந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதிலிருந்து அவரது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி மாற்றியமைப்பதும் ஆளும் கட்சி கொண்டு வரும் புதிய திட்டங்களுக்கு சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி எனப் பல்வேறு விஷயங்களைச் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக `ப்ரஜா சைதன்யா யாத்ரா’ (மக்கள் விழிப்புணர்வு பேரணி) என்ற ஒன்றைத் தொடங்கி ஆந்திரா முழுவதும் உள்ள மக்களை நேரில் சந்தித்து வருகிறார் சந்திரபாபு நாயுடு.

`ஜெகன்மோகன் - சந்திரபாபு மோதல்!'- இரண்டே மாதத்தில் தமிழகத்துக்குத் தாவும் கியா நிறுவனம்?

ஆந்திர தலைநகர் திட்டத்துக்காக விசாகப்பட்டினம் அருகில் இருக்கும் பெண்டுருத்தியைச் சேர்ந்த சில மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அந்த மக்களை நேரில் சந்திப்பதற்காக நேற்று விசாகப்பட்டினம் வந்துள்ளார் சந்திரபாபு நாயுடு. அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் கூடிய ஆயிரக்கணக்கானவர்கள் `கோ பேக் நாயுடு’ என கோஷங்களை எழுப்பி பதாகைகளுடன் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

மேலும் அடையாளம் தெரியாத சிலர் சந்திரபாபு நாயுடு வந்த கார் மீது முட்டை, தக்காளி, செருப்பு ஆகியவற்றை வீசியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சந்திரபாபு நாயுடு தன் காரிலேயே காத்திருந்துள்ளார். இருந்தும் அங்கு கூடியவர்கள் அவருக்கு வழி விடாமல் தடுத்துள்ளனர். பின் காரிலிருந்து இறங்கி நடந்து சென்ற நாயுடுவை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வீட்டுச் சிறையில் சந்திரபாபு நாயுடு, மகன்!- அரசுக்கு எதிராகக் களமிறங்கியதால் ஜெகன்மோகன் அதிரடி

இதனால் கடுப்பான சந்திரபாபு நாயுடு தன் தொண்டர்களுடன் நெடுஞ்சாலையிலேயே அமர்ந்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ``ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியினரைக் காவலர்கள் எப்படி விமானநிலையத்துக்குள் அனுமதிக்கலாம். அவர்களால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நான் ஆட்சியில் இருக்கும் போது நானோ என் கட்சியினரோ ஜெகன்மோகன் ரெட்டியின் பாதயாத்திரையைத் தடுத்திருக்கிறோமா? ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் அமைதியாக இருக்கும் விசாகப்பட்டினத்தைக் கலவர பூமியாக மாற்றுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து காவலர்கள் என்னைத் தடுக்கிறார்கள், அவர்கள் என் மீது என்கவுன்டர் நடத்தினாலும் நடத்தலாம்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

காலை 11:30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாகப்பட்டினம் விமான நிலையம் போர்க்களமாக இருந்துள்ளது. இரு தரப்பினரையும் கட்டுப்படுத்த முடியாத காவலர்கள் இறுதியாகப் பாதுகாப்பு காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களே அவரை விமானத்தில் ஏற்றி விஜயவாடாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது பற்றிப் பேசியுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், ``எங்களுக்கும் விசாகப்பட்டினத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சந்திரபாபு நாயுடு வருவதை விரும்பாத விசாகப்பட்டினம் மக்கள்தான் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருக்கும் என் பேரணிக்குக் காவலர்கள் அனுமதி வழங்கிவிட்டனர், இங்குள்ள மக்களின் நிலத்தை அபகரிப்பதாகக் கேள்விப்பட்டு அவர்களைச் சந்திக்கத்தான் நான் வந்தேன். ஆனால் ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் என்னைத் தடுத்தனர். விசாகபட்டினத்தில் உள்ள மக்கள் அமைதியான நல்லவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒய்.எஸ்.ஆர் கட்சியினர்தான் இதைச் செய்துள்ளனர். எனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் என் கார் மீது முட்டை, செருப்பு வீசப்பட்டுள்ளது. காவலர்கள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று பிறகு என் பேரணியை நடத்திக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு