Published:Updated:

`ரூ.1.5 கோடி மோசடி - நடிகை ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதிந்தது போலீஸ்!'

நடிகை ஷில்பா ஷெட்டி மீது ரூ.1.5 கோடி அளவுக்கு மோசடி செய்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து, தற்போது போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் அவர் கணவர் ராஜ்குந்த்ராவும் இணைந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிட்னஸ் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தனர். அந்த கம்பெனியின் கிளைகளை நாடு முழுவதும் தொடங்க, முக்கிய நகரங்களில் பொதுமக்களிடம் முதலீடு பெற்றனர். இந்த நிலையில், கிளைகள் தொடங்க பணம் கொடுத்தவர்களில் சிலர் ஷில்பா ஷெட்டி தங்களை ஏமாற்றிவிட்டதாக முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸில் புகார் செய்திருந்தனர். அந்த புகார் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தற்போது புனேயை சேர்ந்த யாஷ் நிதின் என்பவர் ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா, காசிப் கான் ஆகியோர் மீது போலீஸில் புகார் செய்திருக்கிறார். இது தொடர்பாகப் புகாரளித்த யாஷ் நிதின் கூறுகையில், ``ஷில்பா ஷெட்டியும் அவர் கணவரும் சேர்ந்து புனே வந்து, நான் தேர்வு செய்து வைத்திருந்த இடத்தை பார்வையிட்டு கிளையைத் தொடங்க அனுமதி கொடுத்தனர். அதோடு கிளையைத் தொடங்க என்னிடமிருந்து ரூ.1.5 கோடியை ஷில்பா ஷெட்டியும், அவர் கணவரும் பெற்றுக்கொண்டனர்.

ஷில்பாஷெட்டி-ராஜ்குந்த்ரா
ஷில்பாஷெட்டி-ராஜ்குந்த்ரா

ஆனால், பணம் கொடுத்த பிறகும் கிளையைத் தொடங்குவதற்கான பொருள்கள் எதுவும் ஷில்பா ஷெட்டி தரப்பிலிருந்து எனக்கு வழங்கப்படவில்லை. ஷில்பா ஷெட்டியின் கம்பெனியில் இயக்குனராக இருந்த காசிப்கான் என்பவரைச் சந்தித்து கிளையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் தேவையான உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்தார். ஆனால், எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், 2015-ம் ஆண்டு இது தொடர்பாக மும்பை போலீஸில் புகார் செய்தேன். அதனைத் தொடர்ந்து பணத்தைத் திரும்பக் கொடுப்பதாக ஷில்பா ஷெட்டி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதனால், நான் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன். ஆனால் தொடர்ந்து பணத்தைத் திரும்பக் கொடுக்காமல், காசிப் கான் மிரட்ட ஆரம்பித்தார். அதனால், தற்போது மீண்டும் மும்பை போலீஸில் புகார் செய்திருக்கிறேன்" என்றார்.

யாஷ் நிதினின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ்குந்த்ரா, காசிப் கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தங்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து ஷில்பா ஷெட்டி அதிர்ச்சி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், காசிப் கான் நடத்திய பிட்னஸ் கம்பெனிக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படம் எடுத்த விவகாரத்தில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மீது ரூ.41 லட்சம் மோசடி புகார் - டெல்லி தொழிலதிபர் கோர்ட்டில் முறையீடு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு