Published:Updated:

`அரசாங்க அமைப்பு எப்போதும் சிறந்தது!' -பிரசவத்துக்காக மனைவியை அரசு மருத்துவனையில் சேர்த்த கலெக்டர்

பள்ளிப் படிப்பிலும் கல்லூரிப் படிப்பிலும் அவ்வளவு பெரிய மதிப்பெண்ணை எடுக்கவில்லை. இருந்தாலும், ஒரு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று கனவு கண்டு அதற்காக ஏழு வருடம் உழைத்து ஐ.ஏ.எஸ்க்குத் தேர்வாகியுள்ளார்.

கலெக்டர் அவனிஷ் குமார் சரண்
கலெக்டர் அவனிஷ் குமார் சரண்

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அவனிஷ் குமார் சரண். வழக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் அவனிஷ் கொஞ்சம் வித்தியாசமானவர் என்று சொல்லலாம். இவர் சமீபத்தில் செய்த செயல் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைதளங்களில் வைரலாகவும் அவருக்குப் பாராட்டுகளையும் பெற்றுத்தந்துள்ளது. அவனிஷ் சரணின் மனைவி ருத்ரானி கர்ப்பமடைந்திருந்தார். கடந்த 5-ம் தேதி இவருக்குப் பிரசவ வலி ஏற்பட அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவனிஷ் குமார் சரண்
அவனிஷ் குமார் சரண்

`இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா...?' மாவட்ட கலெக்டராக இருக்கும் அவனிஷ் பிரசவ வலியில் தவித்த தனது மனைவியைத் தனியார் மருத்துவமனையில் சேர்க்காமல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். கபீர்தம் மாவட்ட தலைநகர் காவர்தாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்து அங்குள்ளவர்களை ஆச்சர்யப்படுத்தினார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் ஆக பெண் குழந்தைக்குத் தந்தை ஆகியிருக்கிறார் அவனிஷ். இன்று, சிறு நோய்க்கும் மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும்போது கலெக்டரின் இந்தச் செயல் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அவனிஷ் சரண் இப்படிச் செய்வது முதல்முறையல்ல. தனது முதல் குழந்தையை ஓர் அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார். தனது மகளும் சாதாரண குழந்தைகளைப் போல அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்டு படிக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்துள்ளார். ``சில குறைபாடுகள் இருந்தபோதிலும் அரசாங்க அமைப்பு எப்போதும் சிறந்தது. அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள்மீது பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்.

அவனிஷ் குமார் சரண்
அவனிஷ் குமார் சரண்

என்னைப் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் அரசு வசதிகளை மக்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன்" என்றும் அவனிஷ் கூறியுள்ளார்.

அரசு வசதிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தும்போது அதற்கான தேவைகள் அதிகமாகி அரசு பூர்த்தி செய்ய நேரிடும் என்பதை மனதில்வைத்துதான் அவனிஷ் தொடர்ந்து இப்படிச் செய்துவருகிறார்.

இவரின் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்களைக் கவர்ந்து வருவதால் சத்தீஸ்கரில் பிரபலமான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக அறியப்படுகிறார். அதேநேரம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துகொண்டு அரசு நடவடிக்கைகளை விமர்சிக்கவும் அவனிஷ் தயங்கியதில்லை என்று சொல்லப்படுகிறது. அரசு திட்டங்கள் மக்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்று பொதுவெளியில் பலமுறை பேசியுள்ளார். இதனால் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றுள்ளார். அரசு திட்டங்களில் அவனிஷ் அதிகக் கவனம் எடுத்துக்கொள்வதற்கு அவரது பின்னணியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

அவனிஷ் குமார் சரண்
அவனிஷ் குமார் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது வேலை பார்த்துவந்தாலும் அவனிஷ் சரணின் சொந்த ஊர் பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள கெவாடா கிராமம். தந்தை ஓர் ஆசிரியராக இருந்தாலும் ஏழ்மையான நிலையிலேயே இருந்துள்ளார். இதனால் பாதி நாள்கள் வறுமையிலேயே கழிந்துள்ளது. தனது கிராமத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

பள்ளி நாள்களில் சாதாரண மாணவர்தான். படிப்பில் சொல்லிக்கொள்ளும்படி எல்லாம் இல்லை. பள்ளிப் படிப்பிலும் கல்லூரிப் படிப்பிலும் அதிக மதிப்பெண்ணை எடுக்கவில்லை. இருந்தாலும், ஒரு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று கனவு கண்டு அதற்காக ஏழு வருடம் உழைத்து ஐ.ஏ.எஸ்க்குத் தேர்வாகியிருக்கிறார்.

அவனிஷ் குமார் சரண்
அவனிஷ் குமார் சரண்

சத்தீஸ்கர் கேடரில் ஐ.ஏ.எஸ் ஆனவர் அங்குள்ள எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகிறார். பசுமைத் திட்டம், ஆம்புலன்ஸ் திட்டம், குழந்தைகள் கல்வி உட்பட பல்வேறு திட்டங்களை தான் செல்லும் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றுவருகிறார் அவனிஷ்.