Published:Updated:

`மாணவர்கள், முதியவர்களுக்கு அனுமதி மறுப்பு!’ - எளிமையாக நடக்கும் சுதந்திரதின விழா

 சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா ( மாதிரி புகைப்படம் )

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் இந்த வருடம் மிகவும் எளிமையான முறையில் சுதந்திர தின விழா நடக்கவுள்ளது.

நாட்டின் 74-வது சுதந்திர தின விழா வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் மத்திய அரசு சார்பாக டெல்லியிலும், அனைத்து மாநில முதல்வர்களும் கொடியேற்றி சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகிகளை அழைத்து மரியாதை செய்வர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால், இந்த வருடம் கொரோனாத் தொற்று காரணமாக இந்த விழாவை மிகவும் எளிமையாக நடத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

 சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா
மாதிரி புகைப்படம்

இந்நிலையில் தமிழகத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் மாணவர்கள், முதியோர் கலந்துகொள்ள வேண்டாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டின் 74-வது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்வர் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் கலந்துகொள்வார்கள்.

மன்கி பாத்: `கார்கில் தினம் டு சுதந்திர தினம்!’ - பிரதமர் மோடி உரை

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. சுதந்திர போராட்டத் தியாகிகள் வயது மூப்பைக் கருத்தில் கொண்டும் கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் விதமாகவும் மாவட்டம்தோறும் சுதந்திர போராட்டத் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா
மாதிரி புகைப்படம்

மேலும், ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு, நேரில் சென்று சமூக இடைவெளியைப் பின்பற்றி இனிப்புகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா முன்கள பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதமாகக் கோட்டைக் கொத்தளத்தில் அவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த விழா நிகழ்ச்சிகள் நேரடியாகத் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய அரசு சார்பிலும் மிகவும் எளிமையான முறையில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. செங்கோட்டையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கொடியேற்றவுள்ளார். பின்னர் 32 வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் முப்படைகளின் அணிவகுப்பு, சமூக இடைவெளியுடன் நடக்கவுள்ளது. மேலும், 350 டெல்லி போலீஸாரும் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் கலந்துகொள்ளவுள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் 300 முதல் 500 விருந்தினர்கள் அழைக்கப்படுவர். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக 60 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா
மாதிரி புகைப்படம்

இந்நிலையில், தடை செய்யப்பட்ட சீக்கியத்துக்கான நீதி என்ற அமைப்பு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினால் 1,25,000 டாலர் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு