Published:Updated:

சபரிமலைக்கு வந்த பெண்மீது மிளகாய்ப்பொடி ஸ்ப்ரே! - கொச்சி கமிஷனர் அலுவலகத்தில் பதற்றம்

``என் மீது சிலர் மிளகாய் ஸ்ப்ரே அடித்தனர். சபரி மலைக்குச் செல்வதற்கான சுப்ரீம் கோர்ட் ஆர்டர் எங்களிடம் உள்ளது."

பிந்து
பிந்து

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதுகுறித்து 7 பேர்கொண்ட அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தது. மேலும், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை செல்ல தடையில்லை எனவும் கூறியிருந்தது. இந்த நிலையில் சபரிமலையில் இளம் பெண்கள் யாரும் வர வேண்டாம் எனக் கேரள அரசு அறிவித்திருந்தது. அப்படி யாராவது வருவதாக இருந்தால் உச்ச நீதிமன்ற அனுமதி வாங்கிவிட்டு வந்தால் போலீஸ் பாதுகாப்பு வழங்கலாம் எனக் கூறியிருந்தது.

பிந்து மீது மிளகாய் ஸ்ப்ரே அடிப்பு
பிந்து மீது மிளகாய் ஸ்ப்ரே அடிப்பு

இதற்கிடையில் கடந்த ஆண்டு சபரிமலைக்குச் செல்ல முயன்ற ரஹானா பாத்திமா இந்தமுறையும் சபரிமலை செல்லுவதாக அறிவித்திருந்தார். ஆனால், ஆக்டிவிஸ்டுகள் விளையாடும் இடமல்ல சபரிமலை எனக் கேரள அரசு தீர்க்கமாகக் கூறியிருந்தது. இந்தநிலையில், சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொச்சி வந்தடைந்தார். அவருடன் ஹாயா பாண்டே, காம்ப்ல்ர் ஹரிநாக்‌ஷி, மீனாக்‌ஷி ஷிண்டே, மனிஷா ஆகியோர் வந்துள்ளனர். மேலும், கடந்தமுறை சபரிமலை சந்நிதானத்தில் தரிசனம் நடத்திய கேரளத்தைச் சேர்ந்த பிந்து அம்மிணியும் விமான நிலையத்திலிருந்து திருப்தி தேசாயுடன் சேர்ந்துகொண்டார்.

பெண் பக்தர்களை விரட்டி விரட்டி வீடியோ... சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் 'மிரட்டல்' உத்தி!

பின்னர் காரில் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள், சபரிமலை செல்ல தங்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஐயப்ப தர்மசேனா அமைப்பினர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் திரண்டனர். இந்த நிலையில் கமிஷனர் அலுவலக வளாகத்தில் வைத்து பிந்து அம்மிணியின் முகத்தில் ஒருவர் திடீரென மிளகாய் ஸ்ப்ரே அடித்தார். உடனே போலீஸார் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார் பிந்து.

சபரிமலை செல்ல வந்த திருப்தி தேசாய்
சபரிமலை செல்ல வந்த திருப்தி தேசாய்

இந்த நிலையில் பிந்து மீது மிளகாய் ஸ்ப்ரே அடித்த நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஹிந்து ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநாத் எனத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிந்து அம்மிணி கூறுகையில், ``என் மீது சிலர் மிளகாய் ஸ்ப்ரே அடித்தனர். சபரி மலைக்கு செல்வதற்கான சுப்ரீம் கோர்ட் ஆர்டர் எங்களிடம் உள்ளது" என்றார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள் இன்று சபரிமலை வருவது குறித்து எங்களுக்கு முன்கூடியே தெரியாது" என்றனர்.

சபரிமலை விவகாரத்தை ஓட்டு அரசியலாகப் பார்க்கிறாரா பினராயி விஜயன்?!

சபரிமலை சந்நிதானம் மற்றும் பம்பையில் ஐயப்ப பக்தர்கள் கடந்த ஆண்டைப்போல நாமஜப போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்படுள்ளது. திருப்தி தேசாய் குழுவினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமா என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.