Published:Updated:

`கொரோனா அச்சம்; எல்லையில் பதற்றம்!’ - இந்தியாவிலிருந்து தங்கள் மக்களை திரும்ப அழைக்கும் சீனா

இந்தியா-சீனா
இந்தியா-சீனா

``விமானத்தில் பயணிக்க விரும்புபவர்கள் தங்களுக்கான பயணக் கட்டணங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சீனாவுக்குச் சென்ற பிறகு அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது”

சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா, இன்று உலகம் முழுவதும் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளிலும் பாதிப்புகள் அதிகமாகி வரும் சூழலில் சீனா அதிகளவில் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது எனலாம். இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள சீனர்களை அழைத்து வர சீன அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக டெல்லியில் உள்ள சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் வைரஸ் அதிக அளவில் பரவி வருவதும் இந்திய மற்றும் சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமும் இதற்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.

கொரோனா
கொரோனா

தூதரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``இந்தியாவில் சிக்கித் தவித்து வரும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் சிறப்பு விமானங்கள் மூலமாக சீனாவுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. சீனாவுக்குத் திரும்ப வர ஆர்வமுள்ளவர்கள் மே 27-ம் தேதி காலைக்குள் பதிவு செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்ய மற்றும் புத்த மத வழிபாட்டுத் தலங்களுக்கு வந்த சீன மக்களும் இதில் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எப்போது, எங்கிருந்து புறப்படும் என்பது பற்றிய தகவல்களும் நாட்டில் தங்கியிருக்கும் அல்லது படிக்கும் சீன மக்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்படவில்லை.

`கொரோனாவைவிட அரசியல் வைரஸ்தான் அதிகம் பரவியுள்ளது!’ - அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சித்த சீனா

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகிறது. விமானத்தில் பயணிக்க விரும்புபவர்கள் தங்களுக்கான பயணக் கட்டணங்களை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சீனாவுக்குச் சென்ற பிறகு அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை தூதரகங்கள் ஒருங்கிணைந்து மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் வைரஸ் தொற்று தொடர்பான காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் விமானங்களில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அல்லது 37.3 டிகிரி சென்டிகிரேட் உடல் வெப்பநிலைக்கு அதிகாக இருப்பவர்கள் விமானங்களில் ஏற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது உடல்நிலை தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சீனா
சீனா
AP

``விமானத்தில் பயணிக்க விரும்புபவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததை மறைத்து, பரிசோதனையின்போது ஆண்டிபைரெடிக்ஸ் மற்றும் பிற தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பொது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட குற்றந்துக்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

`சட்ட நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்!’ - அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
அடுத்த கட்டுரைக்கு