Published:Updated:

India-China FaceOff: `மோடியின் உரையை நீக்கிய WeChat’ -என்ன காரணம்?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசுகையில், `இந்திய எல்லைக்குள் யாரும் நுழைந்துவிடவில்லை’ என்றார்.

இந்திய - சீன எல்லை விவகாரம் ஆண்டுகள் கடந்து தொடர் பிரச்னை ஆகி வருகிறது. கடந்த மே மாதம் முதல், லடாக்கில் இந்தியாவின் கட்டுமானங்களை எதிர்த்த சீனா, எல்லையில் படைகளைக் குவித்தது. பதிலுக்கு இந்தியாவும் படைகளைக் குவித்தது, வாரங்கள் கடந்து பதற்றம் நீடிக்க, மறுபுறம் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவே, படைகளை இரு நாடும் திரும்பப்பெறும் நிலைக்கு வந்தது. இந்தச் சூழலில்தான் கடந்த 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இதன் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்தது. என்றாலும் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்தது. இருநாட்டுத் தலைவர்களும் இது தொடர்பாக தங்களின் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்தியப் பிரதமர் மோடியும், அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, நிலைமையை விளக்கினார். இந்த நிலையில், எல்லைப் பிரச்னை தொடர்பான பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்த கருத்துகள், சீன சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் முக்கியமானது வீ-சாட். கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமான மக்கள் சீனாவில் வீ சாட் என்னும் சமூகவலைதளத்தைப் பயன்படுத்துகிறர்கள். இந்திய தூதரகத்துக்கு இந்த சமூகவலைதளத்தில் அதிகாரபூர்வ கணக்கு இருக்கிறது. எல்லைப் பிரச்னை பெரிய அளவில் உருப்பெற்றபோது அதுதொடர்பான அப்டேட்களை இந்திய தூதரகம் சமூகவலைதளம் மூலம் தொடர்ந்து தெரியப்படுத்தி வந்தது. இந்த நிலையில்தான், எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி பேசியது, இந்திய - சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களின் உரையாடல் தொடர்பாக அப்டேட் உள்ளிட்ட சில பதிவுகள் நீக்கப்பட்டிருந்தது.

WeChat
WeChat
Google Play

முதல் பதிவு நீக்கப்பட்டபோது, பதிவிட்ட கணக்கின் உரிமையாளரே அதை நீக்கிவிட்டார் என பயனாளர்களிடம் கூறியது வீ-சாட். இருப்பினும், இந்தியத் தூதரகம், தாங்கள் எந்தத் தகவலையும் நீக்கவில்லை என விளக்கம் கொடுத்தது. பின்னர், மூன்றாவதாக ஒரு பதிவு நீக்கப்பட்டபோது `இந்தப் பதிவு விதிமுறைகளை மீறியதாக இருப்பதால் நீக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த பதிவு காரணமாக நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. மேலும், அரசின் ரகசியங்களை வெளியிடுதல், போலியான தகவல்கள் உள்ளிட்ட காரணங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பிரதமர் மோடியின் கருத்துகள் வெய்போ என்னும் சமூகவலைதள கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ``எல்லை விவகாரத்தில் இந்தியா அமைதியைத்தான் விரும்புகிறது. ஆனால், சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்” என மோடி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உரை தான் சீனாவில் சர்ச்சையாகி, தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சீனா தனது நடவடிக்கைகளை தங்கள் நாட்டு எல்லைக்குள் மட்டுமே நடத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்த கருத்தும் நீக்கப்பட்டுள்ளதாக சீனாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய உரையை கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.
`அமைதியைத்தான் விரும்புகிறோம்; சீண்டினால்...! - சீனாவை நேரடியாக எச்சரித்த பிரதமர் மோடி

இதனிடையே அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், `இந்திய எல்லைக்குள் யாரும் நுழைந்துவிடவில்லை’ என்றார். மோடியின் இந்தக் கருத்து எல்லையில் பதற்றத்தைக் குறைக்கும் என சீன ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான க்ளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மோடியின் இந்தக் கருத்தை சீன சமூக ஊடகங்கள் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சீன பிரச்னை... பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு