Published:Updated:

`15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு ( Google Earth )

விதிகளை மீறி 15,000 அடி உயரத்தில் அமைத்த டென்டை இந்திய வீரர்கள் அகற்றத் தொடங்கியபோதே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருநாட்டு வீரர்கள் இடையிலான மோதல் வெடித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய- சீன வீரர்கள் இடையே நடந்த மோதல் இருநாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருநாட்டு எல்லைப் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நீடித்த நிலையில், கடந்த 6ம் தேதி இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், இந்தியா சார்பில் லேயில் உள்ள 14வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும் சீனா சார்பில் ஜின்ஜியாங் மாவட்ட ராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் லின் லியு ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு

கூட்டத்தில் இருநாட்டு எல்லைப்பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் துருப்புகளைத் திரும்பப் பெறுவது என்றும் பிராந்தியத்தில் அமைதி நிலவ இருநாட்டு ராணுவங்கள் இடையே ஒத்துழைப்பு நல்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருதரப்பிலும் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட 3 பேர் வீரமரணமடைந்ததாக 16ம் தேதி காலையில் அறிவிக்கப்பட்டது. பின்னர், மாலையில் ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் சீன ராணுவ வீரர்கள் 45 பேர் வரை இறந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

புதிய தகவல்கள்!

இந்தநிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருநாட்டு அதிகாரிகள் இடையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புக்கொண்டபடி சீனா நடந்துகொள்ளவில்லை என்கிறார்கள். கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்தில் உள்ள கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் பாட்ரோல் பாயின்ட் 14 அருகே ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவத் துருப்புகள் டென்ட் ஒன்றை அமைத்ததாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படையினர் அந்த டென்டை அகற்ற அப்பகுதிக்குச் சென்றதாகவும் அப்போது சீன வீரர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு
Google Earth

இதையடுத்து, கர்னல் சந்தோஷ் பாபுவைக் குறிவைத்து சீன வீரர்கள் கற்களால் தாக்கத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன வீரர்கள் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்பிலும் தங்களிடமிருந்த கம்பிகள், லத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கியதாகவும் தெரிகிறது. திங்கள்கிழமை (ஜூன் 15) மதியம் தொடங்கிய இந்த மோதல், நள்ளிரவு வரை பலமணி நேரம் நீடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கைகலப்பின்போது இருதரப்பிலும் தங்களுக்கு ஆதரவாக வீரர்களை சம்பவ இடத்துக்கு வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது.

`நள்ளிரவுவரை நீடித்த கைகலப்பு; கற்களால் தாக்குதல்!’- #GalwanValley-யில் என்ன நடந்தது?

அப்போது வீரர்கள் சில பனிபடர்ந்த கல்வான் ஆற்றில் விழுந்ததாகவும் தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற பிறகு அங்கிருந்து காயமடைந்தவர்கள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை காலையிலேயே முழுமையாக அகற்றப்பட்டதாகவும் தெரிகிறது. சீனா தரப்பிலிருந்து இதுவரை உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.ீ

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
`முப்படைத் தளபதிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு’ -பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா

வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்!

இந்தச் சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் போனில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தாக்குதல் சம்பவத்தை சீனா திட்டமிட்டே நடத்தியதாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேபோல், நிலையைச் சரியான முறையில் கையாள கால அவகாசம் தேவை என சீனா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு