Published:Updated:

`பின் நகர்ந்த சீனப் படை; குறையும் பதற்றம்’ - முன்னேற்றம் காணுமா எல்லை விவகாரம்?

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

சீன அரசின் அதிகாராபூர்வ பத்திரிகையில், `திபெத்திய எல்லையில் உயரமான இடத்தில் இருக்கும் சீனப் படை, இரவு நேரத்தில் எதிரிகளின் பகுதியில் ஊடுருவும் பயிற்சியை செய்தது’ என செய்தி வெளியிட்டது.

மே மாதம் தொடக்கம் முதலே, இந்திய - சீன எல்லையில் பதற்றமான சூழல் பரவத் தொடங்கியது. முதலில் சீன ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் லடாக் பகுதியில் அத்துமீறி பறப்பதாக தகவல்கள் வெளியாயின. தொடர்ந்து இந்தியப் போர் விமானங்கள் அந்தப் பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டது. தொடர்ந்து சீனா, இந்திய எல்லையில் படைகளைக் குவித்தது. பதிலுக்கு இந்தியாவும் படைகளைக் குவித்தது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இதனால் பதற்றமான சூழலே எல்லைப்பகுதியில் நிலவியது. லடாக் பகுதியில் இந்தியாவின் கட்டுமானத்தை நிறுத்தச் சொல்லி சீனா எச்சரித்தது. ஆனால், இந்தியா அதை முழுமையாக மறுத்து விட்டது. நாளுக்கு நாள் எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் கல்வான் நலா எல்லைப் பகுதியில் சீன ராணுவம் சுமார் 2 கிலோ மீட்டர்கள் வரை பின் நகர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பல இடங்களில் சீன ராணுவம் படைகளைக் குவித்துள்ள நிலையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் பின் நகர்ந்தது தெரிய வந்துள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் சுமார் 1 கிலோ மீட்டர் பின் நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் சனிக்கிழமை அன்று இரு நாட்டின் லெப்டினன்ட் ஜெனரல் மட்ட அதிகாரிகள் எல்லைப் பிரச்னை தொடர்பாக பேசவுள்ளதாகவும், அதனால், பதற்றத்தை குறைக்க படைகள் பின்வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக சீன அரசின் அதிகாராபூர்வ பத்திரிகையில், `திபெத்திய எல்லையில் உயரமான இடத்தில் இருக்கும் சீனப் படை, இரவு நேரத்தில் எதிரிகளின் பகுதியில் ஊடுருவும் பயிற்சியை செய்தது’ என செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, `சீனா படைகள் இந்தியாவுக்குள் வரவில்லை என்பதை இந்திய அரசாங்கம் உறுதி செய்யுமா?’ எனக் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனா - இந்தியா
சீனா - இந்தியா

முன்னதாக இந்தியா தரப்பில், டோக்லாம் விவகாரத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு சீனாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே இந்தியா இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வை விரும்பியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட விரும்பியபோது, சீனாவும் அதே பதிலைச் சொல்லியது. இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னையை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்கிறோம் என்று சீனா பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில் எல்லையில் பதற்றம் குறைந்துள்ளதாக வெளியாகும் தகவல்களை, எல்லை விவகாரத்தில் முன்னேற்றமாக எடுத்துக்கொள்ளலாமா என்பது எதிர்வரும் நாள்களில் தெரிய வரும்!

சீன வியூகத்தை எதிர்கொள்ள மீண்டும் `டோக்லாம் குழு’ -லடாக் விவகாரத்தில் முன்னிறுத்தும் மோடி
அடுத்த கட்டுரைக்கு