Published:Updated:

`பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இப்படி?’ -போலீஸாரிடம் கொந்தளித்த ராமச்சந்திர குஹா

போராட்டம்
போராட்டம்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் வரும் 21-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நடக்கும் போராட்டங்களால் நாட்டின் பல பகுதிகளில் திடீர் கலவரங்கள் வெடிக்கின்றன. பேருந்து, ரயில்களுக்குத் தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. போக்குவரத்தும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்துமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி
டெல்லி

இந்த நிலையில், இன்று டெல்லி, பெங்களூரு, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் போன்ற இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை ஜாமியா நகர், செங்கோட்டை, லாகூர் கேட், காஷ்மீரி கேட், நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள மந்தி ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் 14 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

காவலர்கள் பல இடங்களில் தடுப்புகள் வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கோட்டைப் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி ஜே.என்.யு மாணவர்கள் பேரணி நடத்துவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அவர்களை வெளியேற்றும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிக்காகப் பல ஆயிரக்கணக்கான போலீஸார் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையம், தகவல் தொடர்புச் சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

`பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இப்படி?’ -போலீஸாரிடம் கொந்தளித்த ராமச்சந்திர குஹா

அதேபோல் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் வரும் 21-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, இன்று பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியானதையடுத்து அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி கலபுர்கி பகுதியில் கறுப்புக் கொடியுடன் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இருந்த மத்திய பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூரு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்வலர் யோகேந்திர யாதவ் மற்றும் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

``நான் மகாத்மா காந்தியின் புகைப்படத்தைக் கையில் வைத்திருப்பதாலும் மீடியாக்களிடம் பேசுவதாலும் இன்று கைது செய்யப்பட்டுள்ளேன். பா.ஜ.க ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. இங்கு அனைவரும் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், காவலர்கள்தான் அசாதாரண சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்.

காவலர்களுக்கு டெல்லியிலிருந்து உத்தரவு வருகிறது. மக்களின் போராட்டத்தைக் கண்டு டெல்லியில் உள்ள தலைவர்கள் பயப்படுகிறார்கள். அமைதியான முறையில் நடக்கும் போராட்டத்துக்கு அனுமதி வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குத் தைரியம் இல்லை. எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும், நாங்கள் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை” எனப் பேசியுள்ளார்.

பெங்களூரின் பல்வேறு இடங்களில் நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மண்டபங்கள், டவுன் ஹால் போன்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு