Published:Updated:

`இது திட்டமிட்டு நடந்ததாகக் கருதுகிறோம்’ - உ.பி-யில் 67 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் #CAA

குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்ததுக்கு காரணமாக இருந்த கடைகள் என்று கூறி உ.பி-யில் 67 கடைகளுக்கு சீல் வைத்துள்ளது அம்மாநில அரசு.

போராட்டம்
போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதே போராட்டம் கடந்த இரண்டு நாள்களாக உத்தரப்பிரதேசத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூட்டில் சிக்கி இதுவரை 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 705 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 124 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இதற்கிடையில் இரு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுபவர்களின் சொந்த உடைமைகள் பறிக்கப்பட்டு, அரசின் இழப்பைச் சரிசெய்ய அவை ஏலத்தில் விடப்படும்” என அறிவித்திருந்தார். இவரின் அறிவிப்பு வெளியான மறுநாளே உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், லக்னோ, மீரட், முசாஃபர்நகர், அலிகார், சம்பல்பூர் போன்ற 13 மாவட்டங்களில் போராட்டம் நடந்து அதில் திடீர் கலவரம் ஏற்பட்டது.

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

இந்நிலையில் அந்தக் கலவரத்துக்குக் காரணமான கடைகள் எனக் கூறி லக்னோ, சம்பல்பூர் மற்றும் முசாஃபர் நகரில் உள்ள 67 கடைகளைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது பற்றிப் பேசியுள்ள அப்பகுதியின் மூத்த காவல் அதிகாரி அபிஷேக் யாதவ், ``கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் அமைதியான முறையில் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. ஆனால், பிற்பகலுக்கு மேல்தான் கலவரம் உருவானது. அதில் 10 வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டு பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் காவலர்கள்.

போராட்டம்
போராட்டம்

கலவரம் உருவாவதற்கு முன்னதாகவே அந்தப் பகுதியிலிருந்த கடைகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. சரியாக அந்தக் கடைகளுக்கு வெளியில்தான் கூட்டம் கூடியது. அதனால் இது திட்டமிட்ட சதி என நாங்கள் கருதுகிறோம். எனவே, கடைகளை மூடி சீல் வைத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கலவரத்துக்குக் காரணமானவர்களைத் தேடும் பணியும் நடந்து வருகிறது. இதற்காகக் கலவரப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.