Published:Updated:

"15 நாளாக பிஸ்கட்டும் தண்ணீரும்தான் தருகிறார்கள்.. பசியில் உயிர் போகுது!" -உத்தரப்பிரதேச வேதனை

பசியால் வாடும் மக்கள்
பசியால் வாடும் மக்கள்

சிறிய குழந்தைகளை வைத்துக்கொண்டு, பசியால் வாடுகிறோம், சரியான நேரத்துக்கு உணவு கிடைப்பது இல்லை, எதாவது உதவி செய்யுங்கள்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதில் இந்தியா தற்போது இரண்டாம்கட்ட நிலையில் உள்ளது. சமூகப்பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிப்பால் கொரோனா பரவுவது குறைவாக இருந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா
ஆக்ரா

அன்றாடம் வேலை செய்பவர்களுக்கு வருமானம் இல்லாமல் போனதால் நாடு முழுவதும் மக்கள் பசியால் வாடி வருகின்றனர். கொரோனா பாதிப்பால் ஏற்படும் வறுமையிலிருந்து மீள மத்திய அரசின் சார்பாக பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டன. அதே போன்று ஒவ்வொரு மாநில அரசும் தங்களின் மக்களின் உணவுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரசு செய்யும் உதவி போதுமானதாக இல்லாததால், உணவின்றி தவிப்பதாக பல்வேறு வீடியோக்கள் அன்றாடம் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. அவற்றின் உச்சக்கட்டமாக, மனதைப் பதறவைக்கும் வகையிலான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

ஆக்ராவில் லாக்டெளன் செய்யப்பட்ட பகுதியில் மக்கள் உணவுக்கு ஓடிவந்து கதவு வழியே அவற்றை எடுத்துச் செல்லும் வீடியோ நேற்றிலிருந்து சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகிவருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா... கொரோனா அறிகுறி இருந்த சிலருக்கு பாதிப்பு உறுதியானதால், அங்குள்ள மக்கள் வெளியே வராதபடி லாக் டெளன் செய்யப்பட்ட பகுதி அது. கடந்த சில தினங்களுக்கு முன் ``சிறிய குழந்தைகளை வைத்துக்கொண்டு, பசியால் வாடுகிறோம், சரியான நேரத்துக்கு உணவு கிடைப்பது இல்லை, எதாவது உதவி செய்யுங்கள் என" ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்க, அங்கிருக்கும் மக்களுக்கு, பிஸ்கட் பாக்கெட்கள், தண்ணீர் பாட்டில்கள், டீ ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த நிலையில், நேற்று வெளியாகியுள்ள வீடியோவில், உடல் முழுவதும் பாதுகாப்பு உடையணிந்த ஒருவர் பிஸ்கட் பாக்கெட்களையும் தண்ணீர் பாட்டில்களையும் ஒருவர் அடைக்கப்பட்டிருக்கும் வாயிலில் வைக்க, அங்கிருக்கும் மக்கள் எந்த சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் ஓடிவந்து தங்களுக்கான உணவுகளை எடுத்துச் செல்கின்றனர். மேலும், ``தங்களை அடைத்து வைத்துள்ளார்கள், தங்களுக்கு எந்த மருத்துவ சோதனையும் எடுக்கப்படவில்லை, உணவுக்கும் எந்த வழிவகையும் செய்யவில்லை. 15 நாள்களாக தினமும் பிஸ்கட் பாக்கெட்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் எப்படி போதுமானதாக இருக்கும். அதுவும் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம். அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கொரோனா வந்தாலும் பரவாயில்லை எங்களை வெளியில் விடுங்கள்" என்றும் ஒரு பெண் பேசுகிறார். மனசை கனக்கச் செய்யும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆக்ரா மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ``உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் கடந்த சில நாள்களாக அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் நலன் கருதியே அவர்களை தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இதுபோன்ற ஒரு சூழலில் அவர்கள் இருப்பது பற்றி இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். இதுவரை உத்தரப்பிரதேசத்தில் 1,868 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேசம் ஏழாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு