Published:Updated:

`டியர் மோடி தயவு செய்து என்னைக் கொண்டாடாதீர்கள்!’- பிரதமரின் பெண்கள் தின மரியாதையை நிராகரித்த சிறுமி

பெண்கள் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு கொடுத்த மரியாதையை வேண்டாம் என நிராகரித்துள்ளார் மணிப்பூரைச் சேர்ந்த இளம் காலநிலை ஆர்வலர் சிறுமி லிசிபிரியா.

இந்தியப் பிரதமர் மோடி தான் சமூகவலைதள பக்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக சிந்திப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் என மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. இந்தப் பிரச்னை ஓய்ந்து முடிவதற்குள் இதற்கான காரணத்தை ட்விட்டரில் வெளியிட்டார் மோடி. `பெண்கள் தினமான மார்ச் 8-ம் தேதி பிரதமர் மோடியின் சமூகவலைதள கணக்குகள் அனைத்தையும் ஒருநாள் முழுவதும் நிர்வகிக்கப் பெண்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. உங்களுடைய வாழ்க்கையும் பணியும் உலகத்துக்கு உந்துசக்தியாக உள்ளதா? வித்தியாசமான வாழ்க்கையைக் கொண்ட பெண்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அத்தகைய பெண்களின் வாழ்க்கை குறித்து சமூக வளைதளங்களில் #sheinspiresUs என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவிடுங்கள். அந்தப் பதிவுகளிலிருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பிரதமரின் சமூகவலைதள பக்கங்களில் தங்களின் வாழ்க்கைக் குறிப்பை உலகறிய பதிவிட அனுமதிக்கப்படுவார்கள். உங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் உலகத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

`இந்தியாவின் கிரேட்டா என அழைக்காதீர்கள்..!’- காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் 8 வயதுச் சிறுமி

இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் தங்கள் செயல்களின் மூலம் கவனம் ஈர்த்த பல பெண்களை மரியாதை செய்து அவர்களின் புகழை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. அந்தப் பட்டியலில் மணிப்பூரைச் சேர்ந்த இளம் காலநிலை ஆர்வலர் லிசிபிரியா கங்குஜம் (Licypriya Kangujam) என்ற சிறுமியும் ஊக்கப்படுத்தும் பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

``மணிப்பூரைச் சேர்ந்த லிசிபிரியா இளம் காலநிலை ஆர்வலராக உள்ளார். 2019-ம் ஆண்டு இவர் அப்துல் கலாமின் குழந்தைகள் விருதை வென்றுள்ளார். மேலும், உலக அமைதி மற்றும் இந்திய அமைதிக்கான விருதையும் பெற்றுள்ளார். இவள் ஊக்கமளிக்கவில்லையா? இவரைப் போன்ற ஒருவரை உங்களுக்குத் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்” என மத்திய அரசின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவுக்குப் பதில் அளித்துள்ள லிசிபிரியா, ``அன்புள்ள மோடி, நீங்கள் என் குரலைக் கேட்கப்போவதில்லை என்றால் தயவுசெய்து என்னைக் கொண்டாட வேண்டாம். உங்கள் #SheInspiresUs முன்முயற்சியின் கீழ் நாட்டின் ஊக்கமளிக்கும் பெண்களில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. பலமுறை யோசித்த பிறகே, இந்த மரியாதையை நிராகரிக்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், ``அரசாங்கம் எனது குரலைக் கேட்கவில்லை. ஆனால், இன்று அவர்கள் என்னை நாட்டின் எழுச்சியூட்டும் பெண்ணாகத் தேர்ந்தெடுத்தனர். இது நியாயமா?“ எனக் கேள்வி எழுப்பி தனக்கான மரியாதையை நிராகரித்துள்ளார் சிறுமி லிசிபிரியா. இவரது நிராகரிப்புக்கு சமூகவலைதளங்களில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன .

யார் இந்த லிசிபிரியா கங்குஜம்!

இந்தியாவின் மணிப்பூரைச் சேர்ந்த 9 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம். இவர் 2018-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி மங்கோலியாவில் நடந்த ஐ.நா நிகழ்வில் உலகத் தலைவர்களின் முன்னிலையில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான என்னுடைய குரலை முதன்முதலாக உயர்த்தினார். காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகத் தலைவர்கள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பின்னர் 2019-ம் ஆண்டு முதல் இந்திய நாடாளுமன்ற வாயிலில் தன் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து ஒரு வாரம் போராட்டம் நடத்தினார். இதே கோரிக்கையை முன்வைத்து தற்போதுவரை பல்வேறு இடங்களில் குரல்கொடுத்து வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு