Published:Updated:

`எனக்குப் பிடிக்கவில்லை; முதல்வருக்காக வாசிக்கிறேன்!' -ஆளுநரால் அதிர்ந்த கேரள சட்டமன்றம் #CAA

கேரள சட்டமன்றம்
கேரள சட்டமன்றம்

கேரள சட்டமன்றத்தில் இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஆளுநர் உரையை வாசித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மாநிலம் கேரளா. மேலும், இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. `தன்னிடம் தெரிவிக்காமல் உச்ச நீதிமன்றத்தை அணுகியது முறையற்ற செயல்' என ஆளுநர் குற்றம்சாட்டி வருகிறார்.

கேரள சட்டமன்றம்
கேரள சட்டமன்றம்

இந்நிலையில், இன்று அம்மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான கருத்துகளைத் தான் கூறப்போவதில்லை என்று முன்னதாக ஆரிஃப் கான் கூறியிருந்தார். இது சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையில் காலை முதல்வருடன் சட்டப் பேரவைக்குள் வந்த ஆளுநருக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சட்டப்பேரவைக்குள் `கோ பேக் கவர்னர்’ என்ற பதாகைகளை ஏந்தியபடியும் `ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்' என்றும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

`தலைமை இல்லாத அவஸ்தை..!'-  ஆதங்கப்படும் கேரள பி.ஜே.பி-யின் ஒரே எம்.எல்.ஏ

பின்னர், பாதுகாவலர்களின் உதவியுடன் ஆளுநரைப் பத்திரமாக இருக்கைக்கு அழைத்துச் சென்றார் முதல்வர் பினராயி விஜயன். ஆளுநர் தன் உரையைத் தொடங்கியதும் கோஷமிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால், இதைப் பற்றி கண்டுகொள்ளாத ஆளுநர் தன் உரையைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தார். ஆளுநரின் இருக்கையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது பாதியில் உரையை நிறுத்திவிட்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

வெளிநடப்பு
வெளிநடப்பு

“குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உள்ள பத்தியை நான் படிக்கப் போகிறேன். ஏனெனில், முதல்வர் அதைப் படிக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். இது என் கருத்துக்கு எதிராக இருந்தாலும் கொள்கை அல்லது திட்டத்தின்கீழ் வராது. முதல்வர், இது அரசின் கருத்து எனக் கூறினார், அவருடைய விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் விதமாகவே நான் இதைப் படிக்கவுள்ளேன்” எனக் கூறி குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கருத்துகளை வாசித்தார்.

பின்னர் தன் உரையை முடித்துக்கொண்டு வெளியில் வந்த ஆளுநரிடம் போராட்டம் தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ``நான் கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து இப்படி ஒரு மோசமான சம்பவத்தைப் பார்த்ததில்லை” என்று பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு