Published:Updated:

`லாரி மோதியதால் உயிரிழந்த ஆடு!' - மூன்றரை மணி நேரத்தில் 2.7 கோடி நஷ்டமடைந்த நிறுவனம்

லாரி மோதி உயிரிழந்த ஆட்டால் கோல் இந்தியா நிறுவனத்துக்கு 2.7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Goat - File photo
Goat - File photo

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வருக்கு அருகில் உள்ள சடியா என்ற கிராமத்தில் கோல் இந்தியாவின் மகாநதி நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று வழக்கம்போல் ரயில் வேகன்களில் நிலக்கரிகளை நிரப்ப லாரிகளில் கொண்டு செல்லும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

Coal India
Coal India
Twitter/@CoalIndiaHQ

அப்போது பக்கத்துக் கிராமத்தில் உள்ள ஒரு ஆடு, லாரியை இயக்கும்போது அதன் குறுக்கே விழுந்து உயிரிழந்துள்ளது. இதை அறிந்த கிராம மக்கள் சுரங்கம் முன் திரண்டு, உயிரிழந்த ஆட்டுக்கு நஷ்ட ஈடாக 60,000 ரூபாய் வழங்க வேண்டு எனப் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும், நிலக்கரிகள் ஏற்றிச் செல்லும் ரயில் தண்டவாளங்களை மறைத்தும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பின்னர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்நிலையில், ஒரு ஆடு இறந்ததன் விளைவாக அந்த நிலக்கரி நிறுவனத்துக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மகாநதி சுரங்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Goat - File Photo
Goat - File Photo

” நேற்று காலை லாரி மோதியதால் ஆடு உயிரிழந்தது. அதற்கு நஷ்ட ஈடாக 60,000 ரூபாய் கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள், சுரங்கத்தின் 1 மற்றும் 2-ம் கதவுகளை அடைத்து போராட்டம் நடத்தினர். காலை 11 மணிக்குத் தொடங்கிய போராட்டம் பிற்பகல் 2.30 மணி வரை நீடித்தது. இந்த மூன்றரை மணி நேரப் போராட்டத்தால் எங்கள் சுரங்கத்துக்கு சுமார் 2.68 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என மகாநதி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நிக்கென் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Vikatan

நிலக்கரி சுரங்கம் என்பது ஊருக்கு வெளியில் மிகவும் பாதுகாப்பான இடத்தில்தான் அமைக்கப்படும். இங்கு வேலை செய்யும் ஊழியர்கள், நிர்வாகிகளைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே வர அனுமதியில்லை. அப்படி இருக்கும்போது தடை செய்யப்பட்ட பகுதியில் மக்கள் எப்படி நுழையலாம் என்பது சுரங்க நிறுவனத்தின் கருத்தாக உள்ளது.

Coa lIndia
Coa lIndia
Twitter/@CoalIndiaHQ

``அதிக சுமை ஏற்றிச் செல்லும் சுரங்கப் பகுதியில் நிலக்கரி எடுப்பது, விறகுகள் பொறுக்குவது, கால்நடை மேய்ச்சல் போன்ற காரணங்களுக்காக வேண்டுமென்றே தடையை மீறி மக்கள் உள்ளே நுழைவது கவலையளிக்கிறது” என மெஹ்ரா கூறியுள்ளார்.