Published:Updated:

திருமணம் செய்ய குருவாயூருக்கு 150 கி.மீ. சைக்கிள் பயணம்; வைரலான கோவை ஐ.டி இளைஞர்!

சிவசூர்யா சைக்கிள் பயணம்

``நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களை சந்தித்தவன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக்கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன்...’’

திருமணம் செய்ய குருவாயூருக்கு 150 கி.மீ. சைக்கிள் பயணம்; வைரலான கோவை ஐ.டி இளைஞர்!

``நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களை சந்தித்தவன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக்கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன்...’’

Published:Updated:
சிவசூர்யா சைக்கிள் பயணம்

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசூர்யா. இவர் குஜராத்தில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

சிவசூர்யா
சிவசூர்யா

சிவசூர்யா, பசுமை மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு  செய்வதற்காக சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் சிவசூர்யாவும், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணும் சமீபத்தில் காதல் திருமணம் செய்துள்ளனர்.

முன்னதாக இவர்களின் திருமணத்தை, திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கோயிலில் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தனர். மாப்பிள்ளை சிவசூர்யா, தன் வீட்டில் இருந்து குருவாயூருக்கு சைக்கிளிலேயே கிட்டத்தட்ட 150 கி.மீ பயணம் செய்திருக்கிறார்.

சிவசூர்யா திருமணம்
சிவசூர்யா திருமணம்

சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தன் வீட்டில் இருந்து, நண்பர்களுடன் சைக்கிளில் புறப்பட்டார்.

கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு மதியம் 2.45 மணிக்கு சென்றடைந்தார். பிறகு  குருவாயூர் கோயிலில் வைத்து பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் சிவசூர்யா-அஞ்சனா திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து சிவசூர்யா கூறியதாவது...

சிவசூர்யா - அஞ்சனா தம்பதி
சிவசூர்யா - அஞ்சனா தம்பதி

``எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களை சந்தித்தவன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்.

இதனால், உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பசுமை இந்தியாவை உருவாக்கவும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

சிவசூர்யாவின் சைக்கிள் பயணம்
சிவசூர்யாவின் சைக்கிள் பயணம்

சில மாதங்களுக்கு முன்பு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சைக்கிள்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 10 நாள்களில் 1,902 கி.மீ தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்” என்றார்.