Published:Updated:

`இருமுறை கேலண்டரி விருது; 12 வயது மகள்!’- கர்னல் அஷுதோஷ் சர்மா நினைவுகள் பகிரும் குடும்பத்தினர்

அஷுதோஷ் சர்மா
அஷுதோஷ் சர்மா

ஒரு முறை சர்மா தனது படைப்பிரிவினரோடு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இவர்களை நோக்கி கையில் கையெறிகுண்டுகளுடன் பயங்கரவாதி ஒருவன் வந்துள்ளான்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள ஹண்ட்வாரா பகுதியில் சனிக்கிழமை இரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் காவல்துறையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையின் ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் பொதுமக்கள் சிலரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்ததை அடுத்து அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் பலரை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக ராணுவம் அறிவித்திருக்கிறது.

அஷுதோஷ் சர்மா
அஷுதோஷ் சர்மா

இந்தத் தாக்குதலில் 21 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் கமாண்டிங் ஆபிசர் கர்னல் அஷுதோஷ் சர்மா, மேஜர் அனூஜ், இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள், ஜம்மு - காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் வீரமரணமடைந்தனர்.

இந்த மோதலின் போது உயிர்த் தியாகம் செய்த 21 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவின் கமாண்டிங் ஆபிசரான கர்னல் அஷுதோஷ் சர்மா காஷ்மீர் பள்ளத்தாக்கில் நீண்டகாலமாக பணிபுரிந்தவர். உத்திரப்பிரேதசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கர்னல் சர்மா வீரதீர செயல்களுக்கு பெயர் போனவர். இவரின் சேவையையும் துணிச்சலையும் பாராட்டி இருமுறை கேலண்டரி விருது வழங்கப்பட்டிருக்கிறது. கர்னல் சர்மாவிற்கு மனைவியும் 12 வயதுடைய ஒரு மகளும் உள்ளனர்.

ஒரு முறை சர்மா தனது படைப்பிரிவினரோடு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இவர்களை நோக்கி கையில் கையெறிகுண்டுகளுடன் பயங்கரவாதி ஒருவன் வந்துள்ளான். அவன் மிக அருகில் வந்துவிட்ட பின்பு இதை கவனித்த கர்னல் சர்மா உடனடியாக சுதாரித்து தன் துப்பாக்கியால் பயங்கரவாதியைச் சுட்டுக் கொன்று பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் . இவரின் இந்த வீரத்தையும் துணிச்சலையும் பாராட்டி இவருக்கு கேலண்டரி விருது வழங்கப்பட்டது.

அஷுதோஷ் சர்மாவின் குடும்பம்
அஷுதோஷ் சர்மாவின் குடும்பம்

தன்னுடன் வேலைபார்க்கும் படைப்பிரிவினரிடம் லக்‌ஷர்-இ-தொய்பாவின் ஹைதரை துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்வதே தனது நோக்கம் என பலமுறை கூறியிருக்கிறார் கர்னல் சர்மா.

இந்நிலையில் தற்போது நடந்த தாக்குதலில் பலியான அஷுதோஷ் சர்மாவின் மனைவி பல்லவி அஷுதோஷ், தன் கணவரின் செயல்களுக்காகத் தான் பெருமைப்படுவதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வீரமரணமடைந்த வீரர்கள்
வீரமரணமடைந்த வீரர்கள்

பல்லவி கூறுகையில், ``அவர் தன் படைப்பிரிவின் மீது மிகுந்த பற்று கொண்டவர். எப்போதும் நாட்டின் பணிகளுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார். தன் சீருடை என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். அவருடைய இழப்பு எங்களுக்கு ஈடுகட்டவும் தாங்கிக்கொள்ளவும் முடியாத பேரிழப்பு. ஆனால் மக்களுக்காகவும் அவரோடு பணிபுரியும் படைப்பிரிவினர் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக அவர் இந்தச் செயலுக்காக நான் பெருமைப்படுகிறேன். `1,500 படை வீரர்களைப் பார்க்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. குடும்பத்தை நீ பார்த்துக் கொள்’ என்று அவர் கூறுவார்" என பல்லவி அஷுதோஷ் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு ஜனவரி 2015-ல் நடந்த மோதலில் கர்னல் எம்.என்.ராய் உயிரிழந்ததை அடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளில் பயங்கரவாதிகளுடனான மோதலில் உயிரழந்துள்ள முதல் கமாண்டிங் ஆபிசர் கர்னல் சர்மா ஆவார்.

அடுத்த கட்டுரைக்கு