ஆள்கடத்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை - யுனிசெப்! #Unicef
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது இணையத்தில் அதிகளவில் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இன்றைய தலைமுறையின் குழந்தைப் பருவத்தையே மாற்றி வருகிறது.
சர்வதேச மனித கடத்தலுக்கு எதிரான நாளான இன்று, யுனிசெப் மற்றும் ஐ.ஜே.எம் (International Justice Mission) அமைப்பு இணைந்து சென்னையில் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஒருங்கிணைத்திருந்தனர். 'குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித கடத்தலை எதிர்கொள்வதில் ஊடகங்களின் பங்கு' என்கிற தலைப்பில் ஒருநாள் நிகழ்வு நடைபெற்றது.
பல்வேறு ஊடகங்களிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். பலதுறை சார்ந்த வல்லுநர்களும் இதில் கலந்துகொண்டு பேசினர். ஐ.ஜே.எம் அமைப்பைச் சேர்ந்த மெர்லின் ஃப்ரீடா அறிமுக உரை வழங்கினார். அதில் சமீபத்தில், கர்நாடகாவில் ஒரு முறுக்கு உற்பத்தி தொழிற்சாலையில், பத்து ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டெடுத்த கதையினைப் பகிர்ந்துகொண்டார்.
அடுத்து பேசிய இசபெல்லா ரிச்சர்ட்சன், “மனித கடத்தலில் மட்டும் ஆண்டொன்றிற்கு எட்டு பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுவருகிறது. மனித கடத்தலில் ஈடுபவர்கள் மிகவும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
அதை எதிர்கொள்ள காவல் துறை, நீதித்துறை, தன்னார்வ நிறுவனங்கள், சிவில் சமூகம் என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து வலுவாகச் செயல்பட வேண்டியது அவசியம். ஆள்கடத்தலைப் பற்றி அரசிடம் சரியான தரவுகள் இல்லை. பெரும்பாலும் வறுமையில் இருப்பவர்களைக் குறிவைத்துத்தான் ஆள்கடத்தல் கும்பல்கள் செயல்படுகின்றன” என்றார்.
குழந்தைகளின் இணைய பயன்பாட்டில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசிய துளிர் அமைப்பைச் சேர்ந்த வித்யா ரெட்டி, “குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது இணையத்தில் அதிகளவில் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இன்றைய தலைமுறையின் குழந்தைப் பருவத்தையே மாற்றி வருகிறது. 2025-ம் ஆண்டில் குழந்தைகளை மையமாகவைத்து செயல்படுகிற ஆபாச இணையதளங்களின் வர்த்தகம் என்பது 15 பில்லியன் டாலராக இருக்கும். குழந்தைகளின் படங்களை இணையத்தில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருப்பதைப்போல இணையப் பயன்பாடுகளைப் பற்றியும் சொல்லிக்கொடுப்பதற்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இணையப் பயன்பாட்டைப் பற்றிய கல்வி இன்று தவிர்க்க முடியாதது” என்றார்.
எங்கெல்லாம் மனித உழைப்பு தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது.ஐ.ஜே.எம்(IJM) அமைப்பின் குறளமுதன்
இவர்களைத் தொடர்ந்து யுனிசெப் அமைப்பின் சுகாதா ராய் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிப் பேசினார். கொத்தடிமைகள், இடம்பெயருதல் பற்றிப் பேசிய ஐ.ஜே.எம்(IJM) அமைப்பின் குறளமுதன், "எங்கெல்லாம் மனித உழைப்பு தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது. அரசு இயந்திரம் மட்டுமே இதற்குப் பொறுப்பல்ல. நாம் ஒவ்வொருவருமே அதற்கான பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும். அதற்கான விழிப்புணர்வு வேண்டும்" என்று பேசினார்.
தமிழகத்தில் மிகப்பெரிய ஆடைத் தொழிற்சாலைகளில் சிக்கியிருக்கும், கட்டாயப்படுத்தப்படும் ஊழியர்களைப் பற்றிய புரிதல் பற்றியும் அவர்கள் பேசினர். முக்கியமாக மனித கடத்தல், எவ்வழியில் நடைபெற்றாலும், அதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதுபற்றிய கவனம் ஈர்க்கவும் ஊடகங்கள் செயல்படுவதன் அவசியத்தைப் பற்றிய விவாதத்துடன் கருத்தரங்கு நடைபெற்றது.
கடமைக்காக நடத்தப்படும் ஒரு கூட்டமாக இல்லாமல், செயல்வடிவம் பெரும் சிந்தனைகளாக இந்தக் கருத்தரங்கு நிறைவுபெற்ற மகிழ்ச்சியோடு சென்றனர் ஊடகவியலாளர்கள்.