Published:Updated:

`கொஞ்சம் மரியாதையாகப் பேசக்கூடாதா?'- கோயிலுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சங்கடம்!

Jyothi Vijayakumar
Jyothi Vijayakumar

`சேட்டா. இன்று ஓணம் பண்டிகை. இந்த நல்ல நாளில் நாம் இப்படிப் பேசுவது தவறு. கொஞ்சம் மரியாதையாக பேசக்கூடாதா?. காரை ஓரமாக பார்க் செய்யச் சொன்னால் செய்யப்போகிறோம். அதற்காக இப்படியா பேசுவது...'

ஜோதி விஜயகுமார். இந்தப் பெயர் நாடாளுமன்றத் தேர்தலின்போது கேரளா முழுவதும் மிகவும் வைரலாகப் பேசப்பட்டது. இந்த ஜோதி விஜயகுமார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் வைரலாகக் காரணம், அவரது மொழிபெயர்ப்புதான். தேர்தல் காலங்களில் ராகுல் காந்தி சந்தித்த மொழிபெயர்ப்புப் பிரச்னையைத் துளியும் இல்லாமல் பார்த்துக்கொண்டதுடன் மிகவும் நேர்த்தியாக, ராகுல் பேசி முடித்த அடுத்த நொடியே மொழிபெயர்த்துக் கலக்கினார் ஜோதி. அவரது பேசும் விதம், சைகைகள் என்பதைத் தாண்டி, தேசியப் பிரச்னைகள், மாநிலப் பிரச்னைகள் ஆகியவற்றைத் துல்லியமாக அறிந்துகொண்டு, உடனுக்குடன் மொழிபெயர்த்தது மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

Jyothi Vijayakumar
Jyothi Vijayakumar

பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஜோதிக்கு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத சங்கடங்களும் நேர்ந்துள்ளன. ஓணம் பண்டிகையை முன்னிட்டு தான் பிறந்த ஊரான புலியூர் சென்றிருக்கிறார் ஜோதி. அங்கு தனது குழந்தைகள் மற்றும் தந்தையுடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்குதான் அந்தச் சங்கடம் நடந்துள்ளது. இதுகுறித்து, ``நான் பிறந்து வளர்ந்த இடம் புலியூர். வேலை காரணமாக அங்கிருந்து புலம்பெயர்ந்த நாங்கள் சாதாரண நாள்களில் அங்கு செல்வதில்லை. ஓணம் என்பதால் தற்போது அங்கு சென்றோம். சிறுவயது முதல் நான் சென்றுவந்த கோயிலுக்கு ஓணத்தை முன்னிட்டு தந்தை, குழந்தைகளை அழைத்துக்கொண்டு காரில் கோயிலுக்குச் சென்றோம். குழந்தைகளுக்கு வேண்டியும்.. மழை பெய்த தருணத்தில் சென்றதாலும்.. கோயிலில் சரியான பார்க்கிங் வசதி இல்லை என்பதாலும் காரை கோயிலின் வாசலின்முன்பே உள்ள ரோட்டில் நிறுத்தினோம்.

நல்ல மழை பெய்துகொண்டிருந்த வேளையில் அங்கிருந்து வெளியேறியபோது எங்களுக்கு பரிட்சயம் உள்ள ஒரு ஆள் வந்து, ``இது உங்கள் கார்தானா. மரியாதையாக காரை பார்க்கிங் செய்யமாட்டீர்களா?. கோயில் நடை முன்பாகவா காரை நிறுத்துவீர்கள்'' என்று சத்தம்போட ஆரம்பித்தார். அவர் திட்டும்போதே நான் தந்தையைப் பார்க்க.. அவர் எனக்கு முன்பாகவே சாவியை எடுத்துக்கொண்டு காரை நோக்கிஓடினார். சிறிதுநேரத்தில் காரை எடுத்து வேறுஇடத்தில் பார்க் செய்துவிட்டார். இருந்தும் அந்த சேட்டன் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். அவர் பேசியவிதம் மிகவும் கொடூரமானதாக இருந்தது. சாதாரணமாக ஒரு தவறுசெய்யும்போது பேசி அந்தத் தவற்றை சரிசெய்வதுதான் வழக்கம்.

Jyothi Vijayakumar with his family
Jyothi Vijayakumar with his family

ஆனால் அவர் பேசியவிதம் சங்கடத்தை ஏற்படுத்த, ``சேட்டா. இன்று ஓணம் பண்டிகை. இந்த நல்ல நாளில் நாம் இப்படிப் பேசுவது தவறு. கொஞ்சம் மரியாதையாகப் பேசக்கூடாதா?. காரை ஓரமாக பார்க் செய்யச் சொன்னால் செய்யப்போகிறோம். அதற்காக இப்படியா பேசுவது" என அவரை நோக்கிக் கேள்வி கேட்டேன். அப்போது அங்கிருந்த இரண்டு, மூன்று பேர் தேவையில்லாமல் எங்கள் விஷயத்தில் தலையிட்டுப் பேச ஆரம்பித்தனர். ``நீங்கள் யார்..'' எனக் கேட்டால் அவர்கள் என்னை யார் எனக் கேட்டார்கள். `இது எனது சொந்த ஊர். கோயிலுக்கு சாமி கும்பிட வந்தேன். வந்த இடத்தில் இப்படி நடந்துவிட்டது'' எனக் கூற அந்த மூன்றுபேரும் சேர்ந்து எங்களை திட்ட ஆரம்பித்தனர்.

நீங்கள் யார் எனத் திருப்பிக் கேட்டால், ``அது உங்களுக்கு தேவையில்லாதது. கோயில் சம்பந்தமாக எந்தக் காரியம் என்றாலும் நாங்கள் வருவோம். நாங்கள் கேள்வி கேட்போம்'' எனக் கூறியதுடன் எங்களை பயமுறுத்தும் வகையில் மதம் குறித்தும் அரசியல் குறித்தும் மீண்டும் அதிகமாக சத்தம் போடத் தொடங்கினர். விசாரித்ததில் அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். ``நீங்கள் கோயிலின் அதிகாரபூர்வ குழு உறுப்பினர்களா அல்லது கோயிலின் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரா என்று கேட்டதற்கு, `அது உங்களுக்கு தேவையில்லாத ஒன்று' என்று பதில் கொடுத்தனர். எப்போது கேரளக் கோயில்கள் ஆர்.எஸ்.எஸ் சொத்தாகியது எனத் தெரியவில்லை.

Jyothi Vijayakumar
Jyothi Vijayakumar

அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், கிராமப்புறங்களில் அன்பிற்கும் கவனிப்புக்கும் எந்தக் குறைவும் இருந்ததில்லை. நான் ஓடி வளர்ந்த கோயில் முழுமையாக வேறு சிலரின் கட்டுப்பாட்டில் சென்றுகொண்டிருப்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. சொந்த ஊரில் அந்நியர்போல் நான் நின்றதை நினைக்கும் கேரளம் எவ்வளவு பாசிசத்தின்பிடியில் சிக்கியிருக்கிறது என்று தெரிகிறது" எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவை இட்டிருந்தார். இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானதோடு சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. ஒரு சில மணி நேரங்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கமென்டுகள் குவிந்தன.

ஜோதிக்கு ஆதரவாக சிலர் பேசிவரும் நிலையில், எதிர்த்தரப்பிலோ.. ``அந்தக் கோயில் மிகவும் சிறியது; அதுமட்டுமல்லாமல் ரோட்டின் அருகிலேயே உள்ளது. இவர்கள் காரை நிறுத்தியதால் மற்ற வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்தது. அந்தக் கோயிலின் அமைப்பைப் பார்த்தால் அது உங்களுக்கே புரியும். தேவையில்லாமல் இந்த விவகாரத்தை அரசியலாக்கப் பார்க்கிறார் ஜோதி" என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருந்தும் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையாக மாற மீண்டும் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள ஜோதி, ``இத்தனை கால வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொண்டிருக்கிறேன் என நம்புகிறேன். இனியும் அப்படித்தான் தொடர விருப்பம்.

Jyothi Vijayakumar
Jyothi Vijayakumar

இதுபோன்ற மோசமான கமென்டுகளை கண்டு நான் பயப்படப்போவதில்லை. நான் பதிவிட்ட அந்தப் பதிவு இவ்வளவு சர்ச்சைகளை எதிர்கொள்ளும் என நினைக்கவில்லை. நான் பதிவிட்டது நாங்கள் சந்தித்த சங்கடத்தைதான். இதில் எந்தத் தவறும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். கருத்துச் சுதந்திரம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனக்கு ஏற்பட்டதை சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை. எனக்கு துணை நின்றவர்களுக்கு அனைவருக்கும் நன்றி. எனக்கு எந்த பயமும், பதற்றமும் இல்லை. ஏனென்றால் நான் இந்தியா என்னும் ஜனநாயக நாட்டில் வாழ்கிறேன்" எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் ஓணம் பண்டிகையையொட்டி கேரளத்தில் புது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு