Published:Updated:

`ஏழை மக்களுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவை!’ - ரகுராம் ராஜனுடன் ஆலோசித்த ராகுல் காந்தி

ரகுராம் ராஜன் - ராகுல் காந்தி
ரகுராம் ராஜன் - ராகுல் காந்தி

இந்தியாவின் கொரோனா நிலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக ராகுல் காந்தியும் ரகுராம் ராஜனும் வீடியோவில் ஆலோசனை நடத்தினர்.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-த்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. வைரஸைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது.

தினசரி கூலித் தொழிலாளர்கள் அடுத்தவேளை உணவு இல்லாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் வீடியோவில் உரையாடியுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியாவின் பொருளாதார நெருக்கடி பற்றி விவாதித்துள்ளனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காலை 9 மணிக்குத் தொடங்கிய இவர்களின் உரையாடல் ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற அனைத்துச் சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பேசிய ரகுராம் ராஜன், “ கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல் முன்னெப்போதும் இல்லாத ஒன்று. இந்தியாவில் ஊரடங்கு இன்னும் எவ்வளவு நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது சரியாகத் தெரியவில்லை. அதனால் இதிலிருந்து வெளியேற அரசு நன்கு திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.

இந்தியாவில் 100% வைரஸை விரட்டுவது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது. இந்தியாவில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை விகிதம் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் வெகுதொலைவில் உள்ளது. இந்தியாவில் இப்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே வைரஸ் சோதனை விகிதத்தை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

பின்னர் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ எவ்வளவு கோடி தேவைப்படும் என ராகுல் காந்தி, ரகுராம் ராஜனிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ராஜன், “ இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் உதவ சுமார் 65,000 கோடி ரூபாய் தேவைப்படும். இந்த நிதியின் மூலம் மக்களுக்கு அரசு உதவ வேண்டும். இந்தமாதிரியான சூழல் பொதுவாக எந்த நாட்டுக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிகள் உள்ளன’ எனக் கூறியுள்ளார்.

`நான் சொல்வது விமர்சனம் கிடையாது.. சின்ன அட்வைஸ்!’ - ராகுல் காந்தி லைவ்

பஞ்சாயத்து ராஜ் முறையின்செயல் திறன் தொடர்பான ராகுலின் கேள்விக்கு, “ அது மிகவும் பயனுள்ள திட்டம். இதன் மூலம் நாம் மத்திய அரசின் அதிகாரத்துக்கு அருகில் செல்கிறோம் ” என ராஜன் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து, “ நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் அரசால் ஆதரிக்க முடியாது. அதனால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாகக் குறிப்பிட்ட அளவிலான தொழில்துறைகளைத் தொடங்க வேண்டும். இதனால் பலர் தங்கள் வேலைகளைப் பெறுவார்கள்” என ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

இதேபோல் இந்தியாவின் நிலை மற்றும் பொருளாதாரம் தொடர்பான ராகுல் காந்தியின் பல்வேறு கேள்விகளுக்கு ரகுராம் ராஜன் பதிலளித்துள்ளார். சுமார் 28 நிமிடங்கள் வரை இவர்கள் இருவரும் உரையாடியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு