முன்னாள் மத்திய அமைச்சரும், குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவருமான பரத்சிங் சோலங்கி (68) சமீபத்தில் செய்தியாளர்களிடம், "சில மாதங்கள் தீவிர அரசியலிலிருந்து ஓய்வெடுத்து, அதன் பிறகு சமூக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடிவுசெய்துள்ளேன். இந்த ஓய்வுக்காலத்தில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களைச் சந்திக்க அதிக நேரம் செலவிடுவேன். இது எனது சொந்த முடிவு. யாரும் இதற்குக் காரணமில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, மனைவி ரேஷ்மா படேலுக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால்,விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுமீதான விசாரணை வரும் ஜூன் 15-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய பரத்சிங் சோலங்கி, "நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழவில்லை. எனது சொத்தை அபகரிப்பதற்காகக் கடந்தகாலத்தில் எனக்கு எதிராகப் பல விஷயங்களைச் செய்ய முயன்றதால் நான் விவாகரத்து கோருகிறேன்" எனக் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், நேற்று பரத்சிங் சோலங்கி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வீடியோவில் பரத்சிங் சோலங்கி வேறு ஓர் இளம்பெண்ணுடன் இருப்பதும், அவரின் மனைவி ரேஷ்மா படேல் வீட்டில் நுழைந்து அந்தப் பெண்ணின் தலைமுடியை இழுத்துத் தாக்குவதுமாக நீள்கிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவருமான பரத்சிங் சோலங்கி, "ரேஷ்மா படேல் என் அரசியல் எதிரிகளுடன் கைகோத்துள்ளார். வரும் (மாநில) தேர்தலில் எனக்கும், காங்கிரஸுக்கும் தீங்கு விளைவிக்க விரும்புபவர்களின் கைகளில் அவர் விளையாட்டு பொம்மையாகியுள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் இது போன்ற பிரச்னைகளில் ஆர்வம் காட்டுகின்றன. என்னுடைய இமேஜையும், காங்கிரஸையும் களங்கப்படுத்துவதன் மூலம் அவர்கள் ஆதாயமடைய விரும்புகிறார்கள். ரேஷ்மா படேலை விவாகரத்து செய்த பின்பு என்னோடு இருக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.