Election bannerElection banner
Published:Updated:

மும்பை: எரிபொருள் விலை உயர்வு; குரல் கொடுக்காத அமிதாப், அக்‌ஷய்! - எச்சரிக்கும் காங்கிரஸ்

அக்‌ஷய் குமாருடன் அமிதாப்பச்சன்
அக்‌ஷய் குமாருடன் அமிதாப்பச்சன்

பெட்ரோல். டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடிகர் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் குரல் கொடுக்கவில்லையெனில் அவர்களின் படங்களை வெளியிடவோ, படப்பிடிப்புகளை நடத்தவோ அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சிக்குச் சமீபத்தில் புதிய தலைவராக நானா படோலே நியமிக்கப்பட்டார். அவர் தனது சொந்த மாவட்டமான பண்டாராவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடந்த மாட்டுவண்டி மற்றும் டிராக்டர் பேரணியில் கலந்துகொண்ட பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

``2012-ம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தபோது நடிகர் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர். இப்போது பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியிருக்கும் நிலையில் இருவரும் அமைதியாக இருப்பது ஏன்? சமையல் எரிவாயு விலை 800 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. நரேந்திர மோடி அரசு சாமானிய மக்களுக்குச் செய்யும் அநீதிக்கு எதிராக அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் கருத்து தெரிவிக்கவில்லையெனில் அவர்களின் படங்களை வெளியிடவோ, படப்பிடிப்புகளை நடத்தவோ அனுமதிக்க மாட்டோம். மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்து கொண்டதுபோல் இப்போது மத்திய அரசின் தேச விரோத கொள்கைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

நானா பட்டோலே
நானா பட்டோலே

தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் ஜிதேந்திரா அவாத்தும் காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ``அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமாரைவிட வெளிநாட்டுப் பாடகர் ரிஹான்னா எவ்வளவோ மேல். அக்‌ஷய் குமார் படங்கள் மூலம் அதிகமாகச் சம்பாதிக்கிறார். ஆனால், அவர் சம்பாதிக்கும் பணம் முழுக்க கனடாவுக்குச் செல்கிறது. அக்‌ஷய் குமாருக்கு கனடா குடியுரிமை இருக்கிறது. அமிதாப் பச்சன் பொதுமக்களின் முன்மாதிரியானவர் கிடையாது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து கார்களை எரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இப்போது எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அமிதாப் பச்சன் இப்போது தனது காரை எரிப்பாரா?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இவர்களின் கருத்துக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ``இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எப்படிப் படப்பிடிப்பை நிறுத்த முடியும்... மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சிக்கு நானா படோலே புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தனக்கு விளம்பரம் தேவை என்பதற்காக அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்” என்று தெரிவித்தார். அக்‌ஷய் குமார் ராமர் கோயில்கட்ட அனைவரும் நிதி கொடுக்க வேண்டுமென்று சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு