Published:Updated:

`இரண்டு குழந்தைகளுக்காக சாலையோரப் பள்ளி!’ - 12 மணிநேர ஷிஃப்டுக்குப் பின் கற்பிக்கும் கான்ஸ்டபிள்

சாலையோரப் பள்ளி
சாலையோரப் பள்ளி

ஏழைக் குழந்தைகள் இருவருக்காக சாலையோரத்தில் தற்காலிகமாகப் பள்ளி அமைத்து காவலர் ஒருவர் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு நீட்டிக்கப்பட்டுவருவது அவர்களின் கல்வி நிலையைப் பாதிக்கிறது. இணைய வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது இணைய வசதி கிடைக்காத விளிம்பு நிலை மாணவர்கள்தான்.

`மக்களின் உயிரோடு விளையாடும் செயல்!’ - டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு #NowAtVikatan

இந்நிலையில் உத்தராகண்டில் காவலர் ஒருவர் சாலை ஓரத்தில் இரு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த ட்வீட்டில், ``கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் காவல்துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த இக்கட்டான நிலையில் உத்தராகண்ட் அருகே ருத்ராபூரின் சாலையோரத்தில் அக்கா, தம்பி இருவருக்கும் காவலர் ஒருவர் பாடம் கற்பித்து வருகிறார்.

வசதியற்ற ஏழை சகோதரர் மற்றும் சகோதரியின் ஆவலைக் கண்டதும், ருத்ராபூர் உத்தராகண்ட் மாநிலத்தில் 46வது பட்டாலியனில் பணியாற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் அவர்களுக்காக சாலையோரத்தில் ஒரு பள்ளியைத் தொடங்கியுள்ளார். 12 மணி நேரம் பணியாற்றிய பிறகும் சாலையோரத்தில் அமர்ந்து கற்பிக்கும் அந்தக் காவலருக்கு எனது வாழ்த்துகள் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் கான்ஸ்டபிள் மற்றும் 2 மாணவர்களும் கொரோனா வைரஸ் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி முகமூடி அணிந்துள்ளார்கள். பெயர் தெரியாத கான்ஸ்டபிளை தனது ட்வீட்டில் பாராட்டிய அமைச்சர், அவரது அர்ப்பணிப்பு மற்றும் கருணைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு