Published:Updated:

`மௌனி' மோடி, `பப்பு' ராகுல்... தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மாவின் ட்விட்டர் சர்ச்சை!

ரேகா ஷர்மா
ரேகா ஷர்மா ( Photo: Twitter / NCWIndia )

ரேகா ஷர்மாவின் பழைய ட்வீட்டுகளை நெட்டிசன்களும் அரசியல்வாதிகளும் கோட் செய்து, 'இவர் பெண்கள் ஆணையத்தின் தலைவராக இருப்பதற்குத் தகுதி இல்லாதவர்' என்று கூற, தற்போது தனது ட்விட்டர் அக்கவுன்டை லாக் செய்ததுடன் தனது பழைய ட்வீட்டுகளையும் அழித்துவருகிறார் ரேகா ஷர்மா.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தனது பேச்சால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நெட்டிசன்கள் அவரது பழைய ட்வீட்களை தோண்டியெடுத்து வந்து ட்ரோல் செய்வதால் தனது ட்விட்டர் ஐடியை லாக் செய்துவிட்டு, கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேலான தனது பழைய ட்வீட்டுகளை அழித்துள்ளார். தொடர்ந்து அழித்தும் வருகிறார்.

சரி என்ன பிரச்னை?

2018-ம் ஆண்டிலிருந்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் ரேகா ஷர்மா, நேற்று செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார். அப்போது அவர் உரையாடிய விஷயங்கள் பற்றி தேசிய மகளிர் ஆணையம் ட்வீட் செய்திருந்தது. அதில், ``எங்கள் தலைவர் ரேகா ஷர்மா ஆளுநரைச் சந்தித்து பெண்களின் பாதுகாப்பு பற்றி கலந்தாலோசித்தார். அப்போது, செயலிழந்து நிற்கும் ஒன் ஸ்டாப் சென்டர்கள், கொரோனா வார்டுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் நிலை மற்றும் அதிகரித்து வரும் `லவ் ஜிஹாத்' பற்றியும் உரையாடினார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த `லவ் ஜிஹாத்' என்ற வார்த்தைப் பிரயோகம்தான் ரேகா ஷர்மா பதவி விலக வேண்டும் என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

`லவ் ஜிஹாத்' என்பது இந்துத்துவ வாதிகளால் குறிப்பிடப்படும் வார்த்தை பிரயோகம். அவர்கள், இஸ்லாமிய ஆண்கள் தங்களின் மதத்துக்கு மாற்றுவதற்காக இந்துப் பெண்களை ஏமாற்றி காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறி, அதை `லவ் ஜிகாத்' என்று குறிப்பிடுகிறார்கள். இதனை எப்படி ஒரு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறிப்பிடலாம் என்பதே தற்போதைய சர்ச்சை.

ரேகா ஷர்மாவுக்கு சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராவதற்கு முன்பே, ``பாவமன்னிப்பு என்னும் விஷயம் பெண்களை மட்டுமல்லாது ஆண்களின் வாழ்க்கையையும் சேர்த்தே பாதிக்கும். அதனால் சர்ச்களில் பாவமன்னிப்புக் கேட்கும் முறையை ஒழிக்க வேண்டும்" என்று கூறியவர்,

2012-ம் ஆண்டு தன் ட்வீட்டில் மோடியை, ``மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் சூழ் வாழும், காதுகேட்காத, வாய்பேசாத மனிதர்" என்று குறிப்பிட்டார். 2013-ம் ஆண்டு சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மோடி அவர் நலம்பெற வேண்டும் என்று ட்வீட் செய்தார். அப்போது ஷர்மா, ``உடல்நலம் கருதி சோனியாவை மனநலக் காப்பகத்துக்கு அனுப்புங்கள்" என்று பகிர்ந்தார்.

2015-ம் ஆண்டு, ராகுல் காந்தியை `பப்பு' எனக் கேலி செய்யும் மீமை ஷேர் செய்தார். மேலும், நேரு பெண்களுடன் இருப்பது போன்ற போட்டோஷாப் புகைப்படத்தைக் குறிப்பிட்டு ராகுல்காந்தியை வம்புக்கு இழுப்பது, மகாத்மா காந்தியின் குடும்பத்தை இழிவாகப் பேசுவது என சர்ச்சைக்குரிய வகையில் இவர் ஏற்கெனவே பலமுறை பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரேகா ஷர்மா
ரேகா ஷர்மா
Photo: Twitter / NCWIndia

இதனால் இவரது பழைய ட்வீட்டுகளை நெட்டிசன்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்டு, ``இவர் பெண்கள் ஆணையத்தின் தலைவராக இருப்பதற்குத் தகுதி இல்லாதவர்" என்று கூற, தற்போது தனது ட்விட்டர் அக்கவுன்டை லாக் செய்ததுடன் தனது பழைய ட்வீட்களையும் அழித்துவருகிறார் ரேகா ஷர்மா.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``பெண்ணியத்துக்கு எதிராகவும், இழிவாகவும் செயல்படும் இவரை எப்படி பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புக்குத் தலைவராக ஏற்க முடியும்? எனவே ரேகா ஷர்மாவை உடனடியாகத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

மேலும் காங்கிரஸின் இளைஞர் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ``பெண்களை அவமதிக்கும் கீழ்த்தரமான ட்வீட்களை இப்போது ஏன் அழித்துவருகிறீர்கள்? உங்களைப் போன்ற ஒருவரை தலைவராக நியமனம் செய்ததற்கு பாஜக அரசு தூக்கில் தொங்க வேண்டும். இந்த அரசை ஊக்குவிக்கும் பாலியல் வன்முறையாளர்கள், பெண்களை அவமதிக்கும் உங்களை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளனர். பாஜக அரசுக்குக் கீழ் இந்தியா ஒருபோதும் பெண்களுடைய நாடாக இருக்கப்போவது இல்லை" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு