Published:Updated:

"பெண்கள் குங்குமம் வைக்கமாட்டார்களா?"- சர்ச்சையில் சிக்கிய ரிலையன்ஸின் விநாயகர் சதுர்த்தி விளம்பரம்

சர்ச்சையான ரிலையன்ஸ் விளம்பரம்

ரிலைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் பெண் ஒருவர் நெற்றியில் குங்குமப்பொட்டு இல்லாமல் இடம்பெற்று இருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

"பெண்கள் குங்குமம் வைக்கமாட்டார்களா?"- சர்ச்சையில் சிக்கிய ரிலையன்ஸின் விநாயகர் சதுர்த்தி விளம்பரம்

ரிலைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் பெண் ஒருவர் நெற்றியில் குங்குமப்பொட்டு இல்லாமல் இடம்பெற்று இருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Published:Updated:
சர்ச்சையான ரிலையன்ஸ் விளம்பரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் பிரபல நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தது. அதில் பிரபல பெண் மாடல் ஒருவர் கையில் விநாயகர் சிலையை வீட்டிற்கு எடுத்து வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இருந்தது. அப்புகைப்படம்தான் இப்போது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

திருமணமான பெண்கள் என்றாலே நெற்றியில் குங்குமம் இட்டு இருப்பதுதான் பாரம்பரியம். ஆனால் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இடம் பெற்று இருக்கும் பெண் கையில் விநாயகரை வைத்திருப்பது போல் இருந்தாலும், அப்பெண் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கவில்லை. விளம்பரத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலையில் ரிலையன்ஸ் டிஜிட்டலில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரத்தில் இடம்பெற்ற மாடல்
விளம்பரத்தில் இடம்பெற்ற மாடல்

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த நிறுவனத்தில் இது போன்று பெண் ஒருவர் நெற்றியில் குங்குமம் இல்லாமல் விளம்பரம் செய்திருப்பதைப் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

பிரபல பத்திரிகையாளர் ஸ்மிதா தேஷ்முக், இது தொடர்பாகத் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "பெண்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நெற்றில் பொட்டு வைத்துக்கொள்ளமாட்டார்கள் என்று விளம்பரப்படுத்துவது விநோதமான போக்காகத் தொடர்கிறது. விநாயகர் சதுர்த்திக்கான ரிலையன்ஸ் டிஜிட்டல் விளம்பரம் இது" என்று ரிலையன்ஸ் டிஜிட்டல் வெளியிட்ட விளம்பரத்தையும் பகிர்ந்துள்ளார். அதோடு, "எதிர்ப்புகள் இருந்தாலும் பிராண்டுகள் மாறாது" என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இஷா அம்பானி
இஷா அம்பானி

தேஷ்முக் பதிவை 'Quote' செய்து பிரபல வலதுசாரி ஆதரவாளரான ஷிபாலி வைத்யா கொடுத்துள்ள பதிவில், "எந்த மகாராஷ்டிரப் பெண் நெற்றியில் குங்குமம் இல்லாமல் வீட்டிற்குள் விநாயகர் சிலையை எடுத்து வருகிறார்?" என்று கேட்டுள்ளதோடு, தேஷ்முக்கின் ட்விட்டர் செய்தியை மறுபதிவிட்டு, "விருப்பமானதை எச்சரிக்கையுடன் ஷாப்பிங் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் அக்‌ஷய திரிதியை முன்னிட்டு வெளியிட்ட ரிலையன்ஸ் டிஜிட்டல் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த பெண்ணும் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கவில்லை. இது அப்போதே சமூக வலைதளத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனாலும் மீண்டும் அதே போன்ற ஒரு விளம்பரத்தை ரிலையன்ஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ளது தவறானது என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர். மலபார் கோல்டு நிறுவனமும் அக்‌ஷய் திரிதியைக்கு வெளியிட்ட விளம்பரத்தில் கரீனா கபூர் நெற்றியில் பொட்டு இல்லாமல் இடம்பெற்று இருந்தார் என்றும் ஒரு சர்ச்சை உருவானது.

இது ஒருபுறமிருக்க, பலரும், "இதெல்லாம் ஒரு பிரச்னையா?" என்கிற ரீதியிலும் கேள்வி கேட்டு வருகின்றனர்.