Published:Updated:

`குற்றவாளிகள் நலம்; வழக்கறிஞருக்குத்தான் மனநிலை சரியில்லை!’- ஆவேசப்பட்ட நிர்பயாவின் தாயார்

நிர்பயா பெற்றோர்
நிர்பயா பெற்றோர்

நிர்பயா வழக்கில் வாதாடும் எதிர்த்தரப்பு வழக்கறிஞருக்கு மனநிலை சரியில்லை என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறியுள்ளார்.

இந்தியாவை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. `மார்ச் 3-ம் தேதி, எனக்கு இறுதியாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என நிர்பயாவின் தாயார் கூறியிருந்தார்.

அவரது கூற்றுப்படி அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி வருகின்றன. குற்றவாளி வினய் சர்மா, தனக்கு மனநிலை சரியில்லை என நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே குற்றவாளிகள் தூக்கிலிடப்படலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு ஜனவரி 7-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.

நிர்பயா குற்றவாளிகள்
நிர்பயா குற்றவாளிகள்

தண்டனையைத் தாமதப்படுத்தும் நோக்கில் குற்றவாளிகள் நால்வரும் தனித்தனியாக குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பியதால் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ஜனவரி 31-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அதுவும் மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பித்தது. அதில் 2020 மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

’மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் நிர்பயா குற்றவாளிகள்; புது ட்விஸ்ட்!’ -  திகாரில் என்ன நடக்கிறது?!

இந்நிலையில், வினய் சர்மா டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனக்குத் தலையில் காயமும் வலது கையில் முறிவும் ஏற்பட்டுள்ளது. மன நிலையும் சரியாக இல்லை; என்னை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

’வழக்கறிஞர் ஏ.பி.சிங் சந்திப்புக்குப் பின்னர்தான் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தண்டனையைத் தள்ளிப்போடுவதற்காக ஏதோ டிராமா செய்கிறார்கள். குற்றவாளிகளுக்குத் தினமும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் நல்ல மனநலத்துடன் இருக்கிறார்கள்’ என்கிறது டெல்லி திகார் சிறைத்துறை.

 நிர்பயா தாயார்
நிர்பயா தாயார்

இதுகுறித்து பேசியுள்ள நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, “ குற்றவாளிகள் ஒருபோதும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என அவர்களது வழக்கறிஞர் ஏ.பி.சிங் என்னிடம் சவால்விடுகிறார். என்னுடைய போராட்டத்தைத் தொடருவேன். அரசாங்கம் குற்றவாளிகளைத் தூக்கிலிடவேண்டும். குற்றவாளி வினய் சர்மா நல்ல மனநிலையுடன்தான் இருக்கிறார்.

ஆனால், அவரது வழக்கறிஞருக்குத்தான் மனநிலை சரியில்லை. வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை எனக் கருதுகிறேன். நீதிமன்றத்தையும் இந்த நாட்டையும் அவர் தவறாக வழிநடத்துகிறார். நீதி கிடைப்பதை அவர் தாமதப்படுத்தி வருகிறார். உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றமும் அவரை ஏற்கெனவே எச்சரித்துள்ளது" என்றார் ஆவேசத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு