Published:Updated:

`கொரோனாவை பாராசிட்டாமலே குணப்படுத்துகின்றன!’ - ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்த சந்திரபாபு நாயுடு

ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு
ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு

கொரோனா வைரஸுக்கு வெறும் பாராசிட்டாமலே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஆந்திர முதல்வர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் தற்போது ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதுவே பிற நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைத் தாண்டி இத்தாலியிலும், இரானிலும் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவைப் பொறுத்தவரை, இதுவரை 100-க்கும் அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32 பேரும் கேரளாவில் 22 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 13 பேர் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா வைரஸ் பற்றிப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. நேற்று அமராவதியில் உள்ள ஆந்திர சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ``கொரோனா வைரஸால் நாம் சில விஷயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களாக நாம் கொரோனா வைரஸ் பற்றிக் கேள்விப்பட்டு வருகிறோம். அது ஒரு நாட்டில் உருவாகிப் பிற நாடுகளுக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டுள்ளது. இந்த வைரஸால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று பலரும் இதைக் கண்டு அஞ்சி நடுங்கி வருகின்றனர். ஆனால், கொரோனா நாம் பயப்படும் அளவுக்குக் கொடுமையானது இல்லை.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், ஏற்கெனவே வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் பாதித்தால் அவர்களுக்குத்தான் உயிரிழப்புகள் ஏற்படும். மற்றபடி 80% மக்கள் ஆரோக்கியமாக உள்ளனர். அவர்களுக்கு வைரஸால் எந்த பாதிப்பும் ஏற்படாது. வைரஸ் வந்து சென்றுவிடும் அவ்வளவுதான். இந்த வைரஸுக்கு வெறும் பாராசிட்டாமலே மருந்தாகப் பயன்பட்டு குணப்படுத்துகிறது.

சீனாவில், பாதிக்கப்பட்டவர்கள் ஓர் அரங்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். எனவே, வைரஸ் பயம் இல்லாமல் மாணவர்களுக்குத் தேர்வுகள் கூட நடத்தலாம். பொதுவாக ஒரு மீட்டர் இடைவெளியில் மாணவர்கள் அமரவைக்கப்படுவார்கள். தற்போது அதை 2 மீட்டர் ஆக்கலாம். வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மிகக் குறைவானவர்களே. அதனால் இதைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம்” என்று பேசியுள்ளார்.

வசதியில்லா இரான்; ரெடிமேட் லேப்; வைரஸ் சோதனை - இந்தியர்களை மீட்ட சுகாதாரத்துறையின் சூப்பர் நடவடிக்கை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவரது பேச்சு ஆந்திராவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. ``கொரோனா வைரஸுக்கு பல உயிர்கள் பலியாகியுள்ளன. மேலும், இது மிக மிக வேகமாகப் பரவிவருகிறது. அதனால் இந்த விஷயத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவர் (ஜெகன்மோகன் ரெட்டி) இந்த வைரஸை பாராசிட்டாமல் மூலம் குணப்படுத்திவிடலாம் என்று சாதாரணமாகக் கூறுவதைக் கண்டு அதிர்ச்சியாக உள்ளது.

இவர் கூறுவது நிஜமானால் அனைத்து நாடுகளும் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்காது. அதற்குப் பதிலாக பாராசிட்டாமல் உற்பத்திகளையும் அதன் வரிகளையும் அதிகரித்திருக்கும். முதல்வர் கூறியதை ஏற்காமல், இந்த வைரஸிடமிருந்து தங்களைக் காக்க முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆந்திராவின் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு