Published:Updated:

கொரோனா அதிகரிப்பு: மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தடை!

முதல்வர் உத்தவ் தாக்கரே
முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருவதால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு வரை தினமும் 2,500 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுவந்தது. ஆனால் கடந்த 15 நாள்களில் படிப்படியாக அதிகரித்து நேற்றைய தின பாதிப்பு 7,000-த்தைத் தாண்டியிருக்கிறது.இதனால் புதிய பொதுமுடக்கம் கொண்டு வரப்படும் என்று செய்திகள் வெளியாகிவருகின்றன. இதேநிலை நீடித்தால் பொதுமுடக்கம் கொண்டு வரப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். நேற்று உத்தவ் தாக்கரே டி.வி-யில் ஆற்றிய உரையில், ``மாநிலத்தில் கொரோனா மிகவும் மோசமாக இருக்கிறது. தொடர்ச்சியாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா அதிகரித்துவந்தால் மீண்டும் பொதுமுடக்கம் கொண்டு வரப்படும். அடுத்த 8 முதல் 15 நாள்களில் கொரோனா இரண்டாவது அலை வீசுகிறதா என்பது குறித்துத் தெரியவரும். எனவே, பொதுமக்கள் கொரோனா விதிகளைச் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். மீண்டும் பொதுமுடக்கம் தேவையா? பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பொதுமுடக்கம் வேண்டாம் என்று விரும்பினால் முகக் கவசம் அணிய வேண்டும். பொதுமுடக்கம் வேண்டும் என்று நினைப்பவர்கள் முகக் கவசம் அணிய வேண்டாம். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தினசரி பாதிப்பு 2,000 முதல் 2,500 என்ற அளவில் இருந்து 7,000-ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

கொரோனா கட்டுக்குள் இருப்பதாக நினைக்கிறோம். கொரோனாவைக் கட்டுப்படுத்த கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. கொரோனாவை எதிர்த்துப் போராட வாள் தேவையில்லை. முகக் கவசம் ஒன்றுதான் பாதுகாப்பானது. கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருக்கிறது. மேலும், இரண்டு தடுப்பூசிகள் சோதனையில் இருக்கின்றன. அவை முடிந்த பிறகுதான் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

எனவே, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அமராவதி மற்றும் அகோலா உட்பட சில இடங்களில் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு பொதுமுடக்கம் தேவையா அல்லது கட்டுப்பாடு தேவையா என்பதை முடிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தவிர பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய மத நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள், மற்ற நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை திங்கள் கிழமையிலிருந்து அமலுக்கு வரும்’’ என்று தெரிவித்தார். அமராவதி மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்குப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா: `ராமர் பெயரில் மோசடி சக்திகள் பணம் வசூலிக்கின்றன!’- உத்தவ் தாக்கரே காட்டம்

இது தவிர நாசிக்கில் இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அமைச்சர் சகன் புஜ்பால் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதே போன்று புனேயில் இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் 11 மணிக்கே அடைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 28-ம் தேதி வரை திறந்திருக்கும் என்று புனே டிவிஷனல் கமிஷனர் சௌரப் ராவ் தெரிவித்தார். பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. `ஒவ்வொரு மாவட்டமும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது. இது தவிர மாநிலம் முழுவதும் இரவுக் கட்டுப்பாடுகளை கொண்டுவருவது குறித்துப் பரீசீலித்துவருகிறோம்’ என்று அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு