Election bannerElection banner
Published:Updated:

`கேரளத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று’ - எட்டு நாளில் 16-லிருந்து 80 ஆக உயர்வு!

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

கேரளத்தில் கடந்த 6-ம் தேதி நிலவரப்படி 89 ஹாட்ஸ்பாட்டுகள் இருந்தன. நேற்றைய நிலவரப்படி 16 ஹாட்ஸ்பாட்டுகள் மட்டுமே உள்ளன. இதுவரை 493 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. பிரேக் தி செயின் திட்டம், சமூக இடைவெளி போன்ற திட்டங்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. மேலும், மருத்துவமனைகளில் நர்ஸுகள், மருத்துவர்களின் தீவிர நடவடிக்கைகளாலும் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் குணமடைந்து வீடு திரும்பினர்.

கடந்த 7-ம் தேதி நிலவரப்படி கேரள மாநிலத்தில் 25 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சையில் இருந்தனர். அதற்கு அடுத்த நாளான 8-ம் தேதி கூடுதலாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதே சமயம் 10 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை விரைவில் ஒற்றை இலக்கத்துக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. 9-ம் தேதி இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, ஒருவர் நோய் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. 10-ம் தேதி 4 பேர் நோய் குணமடைந்தனர், 7 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 11-ம் தேதி புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதே சமயம் யாரும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. இதனால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

கடந்த 12-ம் தேதி கூடுதலாக ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அன்றும் யாரும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. இதனால் நோயாளிகள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. 13-ம் தேதி ஒருவர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 10 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டனர். இதனால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. 14-ம் தேதி மட்டும் கொரோனா பாதித்து புதிதாக அட்மிட் ஆனவர்கள் எண்ணிக்கை 26. அன்று 3 பேர் மட்டுமே டிஸ்சாஜ் ஆனார்கள். இதனால் சிகிச்சையில் உள்ள மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது.

நேற்றைய நிலவரப்படி 16 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டனர். யாரும் நோய் குணமடைந்து வீடு திரும்பவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனா தடுப்பு
கொரோனா தடுப்பு

இதுகுறித்து கேரள சுகாதாரத்துதை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மலையாளிகள் ஊர் திரும்பி வருகின்றனர். அவர்களில் இருந்து அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (மே.15) கொரோனா பாதித்த 16 பேரில் 7 பேர் குவைத், சவுதி அரேபியா நாடுகளில் இருந்து வந்தவர்கள். தமிழ்நட்டில் இருந்து வந்த 4 பேர் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த இரண்டுபேர் என 13 பேர் கேரளத்துக்கு வெளியில் இருந்து வந்தவர்கள். மூன்றுபேருக்கு மட்டுமே தொடர்பு மூலமாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் கடந்த 6-ம் தேதி நிலவரப்படி 89 ஹாட்ஸ்பாட்டுகள் இருந்தன. நேற்றைய நிலவரப்படி 16 ஹாட்ஸ்பாட்டுகள் மட்டுமே உள்ளன. இதுவரை 493 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு