Published:Updated:

`கைதட்டல்... ஆரவாரம்..!’ -கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய தம்பதியை நெகிழ வைத்த மக்கள்

ஜிவந்தர், பிரஷாந்தி தம்பதி
ஜிவந்தர், பிரஷாந்தி தம்பதி ( indianexpress )

`கொரோனா ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி கிடையாது. மேலும் காற்றில் பரவும் வியாதியும் கிடையாது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 -ஐ கடந்துவிட்டது. நாடுமுழுவதும் லாக்-டவுண் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு முதலிடம். தொடர்ச்சியான கொரோனா பாஸிட்டிவ் ரிசல்ட்டுகளால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள்.

மாஸ்க்
மாஸ்க்

இந்த நிலையில், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் குடும்பம், தற்போது அதிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளது. புனே நகரைச் சேர்ந்த ஜிவந்தர், பிரஷாந்தி தம்பதிக்கும் அவர்களின் மகளுக்கும்தான் மும்பையில் முதன்முதலாக கொரோனா இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 10-ம் தேதி, இவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர்களுக்கு, தற்போது இரண்டு முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. இதனால் இத்தம்பதி நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாலையில் மகள் அங்கிதாவும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இறுதிக்கட்ட பரிசோதனை முடிவுக்காகக் காத்திருந்த தம்பதி, செவ்வாய்க்கிழமை இரவில் தூக்கம் வராமல் தவித்துள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு ரிசல்ட் வந்த பிறகே நிம்மதி அடைந்துள்ளனர். ``முந்தின நாளே தாங்கள் வீட்டுக்குச் செல்ல அனைத்துப் பொருள்களையும் தயார் செய்துவிட்டோம். எனினும் கொஞ்சம் அச்சம்" இருந்ததாகத் தெரிவித்தனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பதால், தங்களை அருகில் வசிப்பவர்கள் ஒதுக்கக்கூடும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பிரஷாந்தி, ``இரவிலே எங்கள் பொருள்கள் அனைத்தையும் பேக் செய்து, வீட்டுக்குச் செல்ல தயாராகிவிட்டோம். ஒரு விடுதலையின் உணர்வை அப்போது நாங்கள் உணர்ந்தோம்” என்கிறார். புனே நாயுடு மருத்துவமனையை விட்டு வெளியே வந்த தம்பதிக்கு முதல் சர்ப்ரைஸாக, மக்கள் வரிசையில் நின்று கைகளைத் தட்டி ஆரவாரம்செய்து புது நம்பிக்கை ரத்தம் பாய்ச்சினர். ஆம்புலன்ஸில் அவர்கள் ஏறும் வரை அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்தன. பின்னர், போலீஸ் வாகனம் துணையுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

புனேவின் சின்ஹாகத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்ததும், பலரும் தங்கள் பால்கனிகளில் நின்றவாறே கைகளைத் தட்டி, கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களை வரவேற்றனர். இன்னும் சில நெருக்கமானவர்கள், தங்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டுவந்து தந்ததாக" நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் பிரஷாந்தி.

ஜிவந்தர், பிரஷாந்தி தம்பதி
ஜிவந்தர், பிரஷாந்தி தம்பதி
indianexpress

அதேபோன்று, மும்பை நகரின் முதல் கொரோனா பாசிட்டிவ் மூத்த தம்பதியும் (கணவருக்கு வயது 70, மனைவிக்கு வயது 69), தற்போது கொரோனா நெகட்டிவ் என டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 15 நாள்கள் கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள், தற்போது வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கும் அதேபோன்ற வரவேற்பு தங்கள் குடியிருப்பில் கிட்டியதால் நெகிழ்ந்துபோனார்கள். வயதான, நடக்கவே சிரமப்படும் தனது மனைவியை இரண்டாவது மாடியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச்செல்ல சில அண்டை வீட்டுக்காரர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளுடன் வந்து உதவியதாக நெகிழ்ந்தார்.

மேலும் சிலர், மளிகைப் பொருள்கள் அளித்ததாகவும், சிலர் இரவு உணவைத் தயார்செய்து கொண்டுவந்து கொடுத்தாகவும் சொல்கின்றனர். இந்தத் தம்பதிக்கு நாடு முழுவதும் லாக்-டவுண் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் டிஸ்சார்ஜ் ஆன பின்புதான் தெரியுமாம். இவர்களின் மகன் சிங்கப்பூரிலும், மகள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களும் தங்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

`இதுதான் சோஷியல் டிஸ்டன்ஸ்...!' - கொரோனா விழிப்புணர்வுப் புகைப்படம்! #Viral

மும்பை மூத்த தம்பதியும் புனே தம்பதியும், 40 பேர் கொண்ட குழுவுடன் கடந்த மாதம் துபாய் சென்றுவந்தது குறிப்பிடத்தக்கது. துபாய் சென்றுவந்த பிறகு, ஜிவந்தருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவே, தானாக முன்வந்து தனது குடும்பத்தினருடன் கொரோனா பரிசோதனை செய்திருக்கிறார். அதில், கொரோனா பாஸிட்டிவ் எனத் தெரியவந்தது. இதை அறிந்த மும்பையில் உள்ள இந்த மூத்த தம்பதியும் அடுத்த நாளே பரிசோதனை செய்துள்ளனர். இவர்களுக்கும் பாஸிட்டிவ் என ரிசல்ட் வர, துபாய் சென்ற 40 பேருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில், 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மற்றவர்கள், வீட்டிலே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

கொரோனா
கொரோனா
Freepik

மருத்துவர்கள் சிலர் மூத்த தம்பதியின் குடியிருப்புக்கே வந்து, அருகில் வசிக்கும் பலருக்கு பரிசோதனைகள் செய்தனர். அவர்களுக்கும் ரிசல்ட் நெகட்டிவ் என வர, நிம்மதியடைந்தனர். தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இவர்கள் அனைவரும், மேலும் 15 நாள்கள் வீட்டிலே தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

'Formula One' - அடுத்த 21 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி! #21dayslockdown

மும்பையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களில், 68 வயதான வீட்டுப்பணி செய்யும் பெண்மணியும் ஒருவர். இவர் பணி செய்யும் வீட்டு முதலாளி, அமெரிக்காவிலிருந்து வந்தவர். அவர் மூலம் தான் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்கே வந்து, அப்பெண்மணியைச் சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண்மணி கூறுகையில், ``அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். வேண்டுமென்றே யாராவது செய்வார்களா? மருத்துவமனையில் தன்னை நன்றாகக் கவனிக்கிறார்கள்” என்றார். எனினும் அப்பெண்மணியின் வீட்டின் அருகே வசிப்பவர்கள், தங்களை ஒதுக்குவதாகத் தெரிவிக்கிறார் அப்பெண்மணியின் மகன். தனது தாய்க்கு தொற்று இருக்கும் தகவல் வெளியானதும், வீட்டுக்கு யாரும் பால் போடுவதில்லை என்றும் தனது அண்டை வீட்டுகாரர்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் குறிப்பிடுகிறார்.

கொரோனா
கொரோனா

மருத்துவர்கள், ``கொரோனா ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி கிடையாது. காற்றில் பரவும் வியாதியும் கிடையாது. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்கின்றனர். உடலளவில் தள்ளி நின்றால் போதுமானதே... சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கிவைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

News Credit: indianexpress

`தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!’ - குஜராத்தில் இரண்டாவது உயிரிழப்பு #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு