Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: 28 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பரவல்! - பள்ளித் தேர்வுகள் ரத்தா?

கொரோனா எச்சரிக்கை
கொரோனா எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் கொரோனா 28 மாவட்டங்களில் வேகமாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. மும்பையில் தினத் தொற்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியதால் புறநகர் ரயில் பயணத்துக்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட இருக்கின்றன.

மகாராஷ்டிராவில் சற்று தணிந்திருந்த கொரோனாவின் தாக்கம், கடந்த சில நாள்களாக மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் 21 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது மேலும் ஏழு மாவட்டங்களில் பரவியிருக்கிறது. இதன் மூலம் மொத்தமுள்ள் 36 மாவட்டங்களில், 28 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்திருக்கிறது.

அமைச்சர் விஜய்
அமைச்சர் விஜய்

அமராவதி, அகோலா, புல்தானா, யவத்மால், நாக்பூர் மாவட்டங்களில் புதிதாக கொரோனா பரவியிருக்கிறது. அதோடு லாத்தூர், ஹின்கோலி, பர்பானி நாண்டெட் மாவட்டங்களில் கொரோனா தினத்தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. புனே, நாக்பூர், மும்பை, தானே, அமராவதி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது. அமராவதியில் ஒவ்வொரு வாரமும் கொரோனா பாதிப்பு 41.5 சதவிகிதமும், அகோலாவில் 30.8 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,034 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் 24 மணி நேரத்தில் 8,333 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. 48 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா அதிகரித்துவருவதால், மீண்டும் பொதுமுடக்கம் கொண்டுவருவது குறித்து மாநில அரசு பரிசீலித்துவந்தது. ஆனால், பொதுமுடக்கத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு வந்ததால், அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசிக்காக உருவாக்கப்பட்ட `Co-WIN' செயலி... இதில் என்ன பிரச்னை?

ஆனாலும் அடுத்த ஒரு வாரத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்திருக்கிறது. அதேசமயம் மும்பையில் புறநகர் ரயில்களில் அனைவரும் பயணம் செய்ய அனுமதித்ததும், கொரோனா தொற்று அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மீண்டும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்பட்டுவருவதாக அமைச்சர் விஜய வதேத்திவார் தெரிவித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ``மும்பையில் புறநகர் ரயில்கள், பஸ்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும், மார்க்கெட்கள், திருமண மண்டபங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றார். தற்போதிருக்கும் நிலை தொடர்ந்து நீடித்தால், புறநகர் ரயில்களில் பயணம் செய்ய மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றும், அது குறித்து அடுத்த வாரம் முடிவுசெய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்த நிலையில், மீண்டும் இரட்டை இலக்க எண்களில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது.

மும்பை குடிசைப் பகுதிகள்
மும்பை குடிசைப் பகுதிகள்

கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால், தமிழகத்தைப் பின்பற்றி மகாராஷ்டிரா அரசும், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலும், 11-வது வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தாமல் மாணவர்கள் தேர்ச்சியடைந்ததாக அறிவிப்பது குறித்து பரீசீலித்துவருவதாக மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார். முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சியடையவைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அமைச்சர் விஜயிடம் இது குறித்துக் கேட்டதற்கு, மாணவர்களுக்குக் கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். எனவே, ஆன்லைனில் தேர்வு நடத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு