Published:Updated:

`கண்காணிப்பில் 59,295 பேர்; ஆட்சியர்களுக்கு அதிகாரம்!’ கேரளாவைத் தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா

கொரோனா
கொரோனா ( ANI )

கேரளாவின் 14 மாவட்டங்களிலும் சேர்த்து 59,295 பேர் தனிமைபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகின் 190 நாடுகளில் பரவியுள்ளது. தமிழகத்தை அடுத்துள்ள கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் வளைகுடா நாடுகளிலிருந்து கேரளத்துக்கு வந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் ஒவ்வொரு நாளும் 12 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று ஒரேநாளில் 15 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை கேரளத்தில் 64 ஆக உயர்ந்துள்ளது.

அமைச்சர் கே.கே.சைலஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
அமைச்சர் கே.கே.சைலஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கேரளத்தில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பரவி உள்ளது. அதில் காசர்கோடு மாவட்டத்தில் 19 பேருக்கும் எர்ணாகுளம் மாவட்டத்தில் 12 பேருக்கும் கண்ணூரில் 10 பேருக்கும், பத்தனம்திட்டாவில் 9 பேருக்கும் திருவனந்தபுரத்தில் 4 பேருக்கும் மலப்புரத்தில் 4 பேருக்கும் கோட்டயத்தில் 2 பேருக்கும் கோழிக்கோட்டில் 2 பேருக்கும் இடுக்கி, திருச்சூர் மாவட்டத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளது.

`அதிர்ச்சி’ அமெரிக்கா.. `லாக்-டவுன்’ ஈரோடு.. காரணம்..?' -கொரோனா அப்டேட்ஸ்

அதே சமயம் 14 மாவட்டங்களிலும் சேர்த்து 59,295 பேர் தனிமைபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். இதில் 58,981 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறார்கள். 314 பேர் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள். வளைகுடா நாடுகளிலிருந்து கேரளத்திற்கு வந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு கடும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேவை ஏற்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங்களில் அம்மாவட்ட கலெக்டர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்றாகக் கூடவோ, தேவையில்லாத பயணங்கள் மேற்கொள்ளவோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு