Published:Updated:

`டிராஃபிக்கில் தும்மல்; வசைபாடிய நபர்’ - சாலையில் வைத்து விளாசிய தம்பதி

சாலையில் நடந்த சண்டை
சாலையில் நடந்த சண்டை

கொரோனா பீதியின் காரணமாக மகாராஷ்ட்ராவில் பொது இடத்தில் தும்மிய நபர் தாக்கப்பட்டார் என்ற கேப்ஷனுடன் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிநபர் சுகாதாரம் மிகவும் அவசியமானது என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 3 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, இருமல் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

கொரோனா குறித்து தகவல்களை சமூகவலைதளங்களின் மூலம் மக்கள் அறிந்து வைத்துள்ளனர். இதனால் பொதுஇடங்களில் சாதாரணமாக தும்மினாலே நம்மை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில்தான் மகாராஷ்டிராவில் பொதுஇடத்தில் சுகாதாரமற்ற முறையில் தும்மிய நபருக்கும் சாலையில் சென்ற தம்பதிக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கடைசியில் அது கைகலப்பில் முடிந்துள்ளது. கொரோனா பீதியின் காரணமாக மகாராஷ்டிராவில் பொது இடத்தில் தும்மிய நபர் தாக்கப்பட்டார் என்ற கேப்ஷனுடன் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`பதற்றம் வேண்டாம்; ஆனால்  முன்னெச்சரிக்கையாக இருங்கள்!’ -தமிழகத்தில் கொரோனா குறித்து விஜயபாஸ்கர்

கோல்காப்பூரைச் சேர்ந்த பிரசாத் மற்றும் அவரது மனைவி இவர்கள் இருவரும்தான் அந்தத் தம்பதி எனத் தெரியவந்துள்ளது. இருசக்கரவாகனத்தில் இந்தத் தம்பதி தங்கள் குழந்தையுடன் சென்றுள்ளனர். டிராபிக் சிக்னலில் வாகனத்தை நிறுத்திய போது ஆரஞ்ச் கலர் டி-சர்ட் அணிந்த நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து நின்றுள்ளார். சிக்னலில் நிற்கும் போது இரண்டு முறை அந்த நபர் தும்மியுள்ளார். இதையடுத்து பிரசாத் அந்த நபரிடம் பொதுஇடத்தில் இப்படி சுகாதாரமற்ற முறையில் தும்மலாமா. கைக்குட்டை வைத்துக்கொள்ளக்கூடாதா. உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தம்பதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதையடுத்து அவர்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர். தொடர்ந்து வந்த அந்த நபர் தகாத வார்த்தைகளில் அந்தத் தம்பதியினரைத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தம்பதியினர் சாலையில் வைத்தே அந்த நபரைத் தாக்கியுள்ளனர். வாய்தகராறில் ஆரம்பித்துக் கடைசியில் கைகலப்பில் முடிந்து விட்டது. சாலையில் இருந்த பொதுமக்கள் அந்தத் தம்பதியைச் சமாதானப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

`இதுக்குமா விஐபி அந்தஸ்தைப் பயன்படுத்துவது?’ - இளைஞரை சாடிய முதல்வர் மம்தா

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியதையடுத்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தன் ட்விட்டர் பக்கத்தில், “ தனக்கும் சுற்றுப்புறத்தில் இருக்கும் மக்களுக்கும் ஆபத்தை விளைக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு