Published:Updated:

கொரோனா:`மகாபாரதப் போரைவிட கடினமாக உள்ளது!’ - மோடியை சீண்டும் சிவசேனா

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

``கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா 21 நாள்களில் வெல்லும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், 100 நாள்களுக்கு ஆகியும் நெருக்கடி தொடர்கிறது.”

கொரோனா வைரஸால் இந்தியா கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,252 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,19,665 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. வைரஸ் தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,160 ஆக அதிகரித்திருக்கிறது.

ஊரடங்கில் அறிவிக்கப்பட்டு வரும் தளர்வுகள் பாதிப்பை இன்னும் அதிகமாக்கும் எனச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக நடக்கும் யுத்தத்தில் 21 நாள்களில் இந்தியா வெல்லும் எனப் பிரதமர் மோடி கூறியிருந்ததைக் குறிப்பிட்டு தற்போது எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மகாராஷ்டிராவின் ஆளும்கட்சியான சிவசேனாவும் தற்போது பிரதமர் மோடி பேசியதைக் குறிப்பிட்டு விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ``கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா 21 நாள்களில் வெல்லும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், 100 நாள்களைக் கடந்தும் நெருக்கடி தொடர்கிறது. கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டம் மகாபாரதப் போரை விடவும் மிகவும் கடினமாக உள்ளது. வைரஸை எதிர்த்துப் போராடுபவர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர்” எனச் சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாமனா கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அந்தக் கட்டுரையில், ``கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதால் இந்தப் போராட்டம் 2021 வரை தொடரும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மோடி: `மருத்துவமனை சர்ச்சை புகைப்படம்!’ - விளக்கமளித்த ராணுவம்

உலகளவில் அதிக பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்தக் கட்டுரையில், ``நிதியளவில் மிகப்பெரிய சக்தியாக மாற வேண்டும் என நாடு கனவு கண்டு வருகிறது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 25,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள விஷயம் துரதிர்ஷ்டவசமானது. பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா ரஷ்யாவைவிட அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாகி வந்தால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கும்” என்றும் சிவசேனா தனது கருத்தப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,11,987 ஆக உள்ளது. இதில் 87,699 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,15,262 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸால் பாதிப்படைந்த 9,026 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து
Pixabay

அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வைரஸ் பாதிப்புகள் குறித்து சிவசேனா, ``மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் அதிகளவில் குணமடைந்து வருகின்றனர். ஆனால், மாநிலத்தின் சில பகுதிகளில் கடுமையான பாதிப்பு நிலவி வருகிறது. எடுத்துக்காட்டாக, தானே மாவட்டம் கொரோனாவால் மிகவும் அதிகமாகப் பாதிப்படைந்துள்ளது. அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எனப் பலரும் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். 2021-ம் ஆண்டுக்கு முன்பு தடுப்பூசி கிடைக்காது. அதுவரை நாம் கொரோனா வைரஸூடன்தான் வாழ வேண்டியது இருக்கும்” என்று கூறியுள்ளது.

மேலும், ``எத்தனை நாள்கள் இந்த ஊரடங்கு உத்தரவுகள் தொடரும்? ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்போது வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் தொடர்ந்து இருந்து வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளார். வைரஸ் தொடர்பான அச்சம் இன்னும் நிலவி வருகிறது. பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை என அனைத்து வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த போதிலும் கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா: `சென்னை, மும்பையைவிட அதிகம்!’ - திணறும் பெங்களூரு; அச்சத்தில் மக்கள்!
அடுத்த கட்டுரைக்கு