Published:Updated:

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தொடரும் மரணங்கள்... புதிய வகை வைரஸா என ஆய்வு!

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் புதிய வைரஸ் பரவுகிறதா?!
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் புதிய வைரஸ் பரவுகிறதா?!

இச்சூழலை கவனித்து உயிர்களை காக்கும்படி பிரதமர் மோடிக்கு அம்ரோஹா மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் எம்.பி. குன்வார் தானிஷ் அலி கடிதமும் எழுதினார்.

உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் 100 வருடம் பழைமையான அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் (Aligarh Muslim University) செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மார்ச் மாதம் இறுதியில் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் 10-க்கும் மேற்பட்ட பேராசியர்கள் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதுமட்டுமட்டுமின்றி, முன்னாள் ஆசிரியர்கள் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உயிரிழக்க இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. தொடர்ந்து அப்பகுதியில், கொரோனா பரவலின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

கொரோனா பரவல் ஆரம்பித்த காலக்கட்டத்தில், ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத பகுதியாக இருந்த அலிகர் சிவில் லைன் பகுதியில் தற்போது தொடர் உயிரிழப்பு ஏற்படுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. புதுவகை வைரஸ் பரவலாக இருக்குமோ என்ற அச்சமும் அப்பகுதியில் ஏற்பட்டது.

யோகி ஆதித்யாநாத்
யோகி ஆதித்யாநாத்

இதனையடுத்து, கொரோனாவால் பாதித்தவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசின் ஐசிஎம்ஆர், சிஎஸ்ஐஆர் நிறுவனத்திற்கு ஆய்வுக்கும் அனுப்பப்பட்டது. இச்சூழலை கவனித்து உயிர்களை காக்கும்படி பிரதமர் மோடிக்கு அம்ரோஹா மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் எம்.பி. குன்வார் தானிஷ் அலி கடிதமும் எழுதினார்.

இதனையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தாக்கம் உத்தரப்பிரதேசத்தில் குறைந்து வருகிறது. ஆக்ஸிஜன் தேவைக்கும் உரிய நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். மேலும், உரிய சிகிச்சை அளிக்க வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றார். பொதுவாக, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் எந்தக் கூட்டத்திற்கும் பா.ஜ,க தலைவர்கள் அழைக்கப்படுவதில்லை. வரும் பா.ஜ.க தலைவர்களுக்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவும். ஆய்வுக்கு வந்ததையடுத்து, இப்பல்கலைக்கழகத்திற்கு வந்த முதல் பா.ஜ.க தலைவர் யோகி ஆதித்யநாத் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்.

கொரோனா ஸ்வாப் டெஸ்ட்
கொரோனா ஸ்வாப் டெஸ்ட்

வைரஸின் தற்போதைய ஆய்வில், 90 சதவீத வைரஸ்கள் B1617 வகையைச் சார்ந்த துணை வகையான B16172-யைச் சேர்ந்தது என்றும் இது கடந்த வருடம் அக்டோபரில் மஹாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட இரட்டை மாறுபாடு (Double Mutant variant) வைரஸ்கள் எனவும் தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 10 சதவிகிதம் B117 வகையைச் சார்ந்தது என்றும் அதிகம் பரவக்கூடியது எனவும் முடிவுகள் வெளியாகியுள்ளன. எனவே இது புதிய வகை வைரஸல்ல எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக நிர்வாகம் கைகளை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அடுத்த கட்டுரைக்கு