Published:Updated:

#coronaupdates `மருத்துவமனையிலிருந்து தப்பிய ஐவர்; திகாரில் தனி அறை’ -`இந்தியாவில் கொரோனா' அப்டேட்ஸ்

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் முதல் சாதாரண மனிதரின் இயல்பு வாழ்க்கை வரை என அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் இத்தாலி, இரான் போன்ற நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா
கொரோனா

இந்தியா முழுவதும் 71 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டு பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இன்று கொரோனா வைரஸால் இந்தியாவில் என்ன நடக்கிறது, இதனால் எடுக்கப்பட்டுள்ள முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்ப்போம்.

5 பேர் தப்பியோட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என மொத்த 5 பேர் கொரோனா அறிகுறிகளுடன் நேற்று மாலை இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று நள்ளிரவு திடீரென மாயமாகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அவர்களாகவே மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நாக்பூர் மருத்துவமனை
நாக்பூர் மருத்துவமனை

மீதமுள்ள நான்கு பேரின் முடிவுகள் இன்று வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் தப்பியுள்ளனர். `நாக்பூர் முழுவதும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தப்பிச் சென்றவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார் அப்பகுதியின் டிசிபி ராகுல் மக்னிகர். இந்த 5 பேரும் தப்பிச் சென்ற விவகாரம் மகாராஷ்டிராவில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. தற்போதுவரை அங்கு 19 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

`கொரோனா வார்டில் இருந்த அந்த இளைஞரின் தியாகம் பாராட்டத்தக்கது!' -நெகிழும் பினராயி விஜயன்

திகார் சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட அறை!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி திகார் சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அனைத்துக் கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கும் வைரஸ் அறிகுறி இல்லை என்று தெரியவந்துள்ளது. இருந்தும் சிறைக்குப் புதிதாக வரும் கைதிகள் மூன்று வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட பிறகே வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறார்கள். தற்போதுவரை திகாரில் 17,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திகார் சிறை
திகார் சிறை

சானிடைஸர், முகமூடி விற்பனை அதிகரிப்பு!

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் சானிடைஸர் மற்றும் முகமூடிகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது, கடந்த 15 நாள்களுடன் ஒப்பிடும்போது சானிடைஸர் 559 சதவிகிதமும் முகமூடிகளின் விற்பனை 334 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்கள் இதன் தேவை அதிகமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முக்கிய வழக்குகள் மட்டும் விசாரணை!

வைரஸ் பரவலின் ஒரு பகுதியாக மக்கள் கூடும் இடமான உச்ச நீதிமன்றமும் ஒரு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. வரும் திங்கள் கிழமை முதல் முக்கியமான வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அதை 6 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

அலுவலகத்தைக் காலி செய்யும் இன்ஃபோசிஸ்!

பெங்களூரில் உள்ள இன்ஃபோஸிஸ் நிறுவனம் தன்னுடைய ஒரு அலுவலகத்தைக் காலி செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அலுவலக ஊழியர் ஒருவர், கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்ததாகத் தெரியவந்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இதைச் செய்வதாக நிறுவனம் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பள்ளி, கல்லூரி, திரையரங்கங்கள் மூடல்!

ராஜஸ்தானில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்கங்கள், ஜிம்கள், கோச்சிங் சென்டர்கள் போன்ற அனைத்தும் வரும் 30-ம் தேதிவரை மூடப்படுவதாக அசோக் கெலாட் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாள்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மியூசிக் ஈவன்ட், நாடகம், பூங்கா போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு