Published:Updated:

கொரோனா: `முடிவுக்குக் கொண்டு வரும் தொடக்கம்!’ - தடுப்பு மருந்து குறித்து மத்திய அரசு

தடுப்பூசி
தடுப்பூசி ( மாதிரி புகைப்படம் /pixabay )

`இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பு மருந்துகள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வரும் தொடக்கமாக இருக்கும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனிதகுலத்தை மிரட்டும் கொரோனா பரவல் கடந்த சில நாள்களாக இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்று நாள்களுக்கும் மேலாக நாள் ஒன்றுக்கு 20,000-க்கும் அதிகமான பாசிட்டிவ் நோயாளிகள் பெருகி வருகின்றனர். இதன்மூலம் சர்வதேச அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்துக்குச் சென்றுவிட்டது இந்தியா. இங்கு இதுவரை கொரோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,97,413 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,693 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இந்தப் பரவலைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் மற்றும் ஸைகோவ்-டி (zycov-D) ஆகிய இரண்டு மருந்துகளும் மனிதர்களிடம் சோதனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்காக இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது என்பதால் மத்திய அரசின் மேற்பார்வையில் திறமையான மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இது தயாராகி வருகிறது.

இந்த மருந்து தொடர்பாக அனைத்து சோதனைகளும் முடிவடைந்த பிறகு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிவிப்பு வரும் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது . இதற்கிடையில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் அவசரம் காட்டுவதாக மத்திய அரசு மீது தொடர் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
pixabay

அதில், “உலக நாடுகளைப் போலவே இந்திய நிறுவனங்களும் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் போன்ற இந்தியாவின் ஆறு நிறுவனங்கள் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன. இதுவரை உலக அளவில் தயாரிக்கப்பட்டுள்ள 140 தடுப்பூசிகளில் 11 தடுப்பூசிகள் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஸைகோவ்-டி ஆகிய இரண்டு மருந்துகளும் அடங்கும்.

கொரோனாவுக்கு `கோவாக்சின்' தடுப்பு மருந்து... சாதித்த தமிழக விவசாயி மகன் கிருஷ்ணா எல்லா!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்துகள் கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டு வரும் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசிகள் மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முதல் இரண்டு கட்ட சோதனைக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் இந்த மருந்துக்கான மூன்றாம்கட்ட பரிசோதனை செய்வதும் அவசியம்.

தடுப்பூசி
தடுப்பூசி
pixabay

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிட்யூட் AZD1222 தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக வாஷிங்டனின் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் MRNA-1273 தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளன.

கடந்த ஆண்டுகளில், இந்தியா குறிப்பிடத்தக்க தடுப்பூசி உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. யுனிசெஃப் நிறுவனத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா 60% பங்கு வகுக்கிறது. உலகில் எங்கு வேண்டுமானாலும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்படலாம். ஆனால், இந்தியத் தயாரிப்பாளர்களின் தலையீடு இல்லாமல் அவை தேவையான அளவைத் தயாரிப்பது சாத்தியமில்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு