Published:Updated:

மும்பை: `சாலை விரிவாக்கம்; நடிகர் அமிதாப் பச்சன் வீட்டுச் சுவரை இடிக்க மாநகராட்சி முடிவு?!'

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

மும்பையில் சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டு காம்பவுண்ட் சுவரை இடிக்க மாநகராட்சி முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகுவில் வசித்துவருகிறார். அவரது வீடான பிரதீக்‌ஷா இருக்கும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுவந்தது. இதையடுத்து 2017-ம் ஆண்டு இந்தச் சாலையை 45 அடியிலிருந்து 60 அடியாக விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்தச் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நடிகர் அமிதாப் பச்சன் வீடு உட்பட சில வீடுகளின் தடுப்பு சுவர்கள் இடையூறாக இருந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு, சாலை விரிவாக்க பணிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிலம் கொடுக்கும்படி கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்தத் திட்டம் கிடப்பில் இருந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு அமிதாப் பச்சன் வீட்டுத் தடுப்புச் சுவர் தவிர்த்து பிற வீடுகளின் தடுப்புச் சுவரை இடித்து சாலையை மாநகராட்சி நிர்வாகம் விரிவுபடுத்தத் தொடங்கியது.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

சாலை விரிவாக்கப் பணி முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால் அமிதாப் பச்சன் வீட்டு தடுப்புச் சுவர் மட்டும் இடிக்கப்படாமல் அந்த இடத்தில் மட்டும் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. சமீபத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் துலிப் மிராண்டா இது குறித்து உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பிரச்னையைக் கிளப்பினார். திட்டமிட்டு அமிதாப் பச்சன் வீட்டு தடுப்புச் சுவரை மட்டும் இடிக்காமல் இருப்பதாகத் தெரிவித்த கவுன்சிலர், ``இதனால் சாலை விரிவாக்கப் பணி முடியாமல் இருப்பதாகத் தெரிவித்தார். அமிதாப் பச்சன் வீட்டுக்கு அருகிலுள்ள வீடுகளில் தேவைப்படும் நிலத்தை எடுத்துக்கொண்ட பிறகு இதில் மட்டும் ஏன் நிலத்தை எடுக்காமல் இருக்கிறீர்கள்?’’ என்று கேட்ட கவுன்சிலர் ``இதில் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் லோக் ஆயுக்தாவில் புகார் செய்வேன் " என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் கவுன்சிலர் மிரண்டாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.

அந்தக் கடிதத்தில், 'பிரதிக்‌ஷா இல்லத்தில் எடுக்க வேண்டிய நிலத்தை சர்வே அதிகாரிகள் அளந்து எல்லையை குறித்துக் கொடுத்தவுடன் நிலம் கையகப்படுத்தப்படும். 2019-ம் ஆண்டே சர்வே நடத்த விண்ணப்பித்து, அதற்குப் பணமும் செலுத்திவிட்டோம். 2021-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மாநகராட்சியும் சர்வேதுறையும் இணைந்து அளந்து இடிக்க வேண்டிய பகுதியைக் கோடிட்டுக் காட்டியது. ஆனால் வரைபடத்தில் சில குளறுபடிகள் இருப்பதாக சர்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காக அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்து சர்வேயர் அறிக்கை தாக்கல் செய்துவிட்டால், உடனே அமிதாப் பச்சன் வீட்டுத் தடுப்புச் சுவரை இடித்து, சாலை விரிவாக்கப் பணியை நிறைவு செய்வோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் இது தொடர்பாக மும்பை புறநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிலிந்த் போர்கருக்கு கடிதமும் எழுதியிருக்கின்றனர். அந்தக் கடிதத்தில், `சாலை விரிவாக்கத்துக்கு சர்வே அதிகாரிகள் விரைந்து பிரக்திக்‌ஷா எல்லையை அளந்து கொடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இது குறித்து அமிதாப் பச்சன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஏற்கெனவே நடிகை கங்கனா ரணாவத் இல்லத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென இடித்து, கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளானார்கள். இப்போது அது போன்ற ஒரு நிலை வரக் கூடாது என்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நிதானமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு