Published:Updated:

‘அவர்களின் செயலுக்கு நாடு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்’-மத்திய அரசைச் சாடும் சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ் ( Twitter/@trspartyonline )

'மத்திய அரசு, மாநிலங்களுக்குத் தேவையான நிதியையும் வழங்கவில்லை, தானாக நிதி திரட்டும் அதிகாரத்தையும் வழங்கவில்லை' என சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மூன்றாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர். சிறு தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அரசுக்கு வருவாய் குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளன.

லாக்டௌன்
லாக்டௌன்
AP | Channi Anand

இந்நிலையில், நேற்று தெலங்கானாவின் கொரோனா நிலை மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் ஆகியவை தொடர்பாக, மாலை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடந்தது. சுமார் 7 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த கூட்டத்தில், மாநிலத்தின் நிலை தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானாவில் வரும் மே 29-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

`தெலங்கானா டு ஜார்க்கண்ட்; முறையான சமூக விலகல்’ - தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட முதல் சிறப்பு ரயில்

ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சந்திரசேகர ராவ், கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு செய்துவரும் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் பேசும்போது, “கொரோனா காலத்தில் மத்திய அரசின் அணுகுமுறையைக் கண்டு நான் வருந்துகிறேன். இதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவே இல்லை. மத்திய அரசின் செயல்களுக்கு நாடு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

இந்தியாவில் முன்பே பொருளாதார மந்தநிலை இருந்தது. தற்போது கொரோனா வெடித்த பிறகு, பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா அரசின் மாத வருவாய் 17,000 கோடி ரூபாயிலிருந்து 1,600 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது. பிரதமருடனான வீடியோ கான்ஃபரஸின் போதே நிறைய விஷயங்களை மிகத் தெளிவாகக் கூறினேன். மத்திய அரசிடம் பரந்த நிதிக் கொள்கை உள்ளது. எனவே, மாநிலங்களுக்கான நிதி வழங்குங்கள் அல்லது நாங்களே சுயமாக நிதி திரட்டும் அதிகாரத்தை வழங்குங்கள் என்றேன். மேலும், மாநிலங்கள் உலகமயக் கொள்கையுடன் இருப்பதால், சுயமாக நிதி பெருக்கிக் கொள்வதற்கான வழியைக் கூறினேன். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை.

`பொருளாதாரத்தை மீட்க முடியும்.. மக்களின் உயிரை..?!’ - லாக்டவுணை நீட்டிக்க கோரும் சந்திரசேகர ராவ்

மாநில அரசுகளுக்கு இருக்கும் கடனைச் செலுத்தும் தேதியை ஒத்திவையுங்கள் எனக் கூறினேன், அதற்கும் பதில் இல்லை. மாநில அரசின் கடனால் மத்திய அரசுக்கு என்ன சுமை வந்துவிடப் போகிறது. ஏன் அவர்கள் தேதியை ஒத்திவைக்க மறுக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. இன்னும் சிறிது காலம் மட்டுமே பொறுமையாக இருப்பேன். அப்போதும் மத்திய அரசிடம் எதுவும் நடக்காவிட்டால், தெலங்கானா சார்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பும்.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

அதேபோல், புலம் பெயர்ந்த தொழிலாளர்களைத் தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச்செல்ல, மத்திய ரயில்வே அவர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தைக் கேட்கிறது. வேலை, உணவுகூட இல்லாத நேரத்தில், தொழிலாளர்கள் எப்படி டிக்கெட்டுக்கு பணம் தருவார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கடுமையாகப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு