உலக அளவில் மண் வளத்தைப் பாதுகாக்க பல நாட்டுத் தலைவர்களுடன் கலந்துரையாடவும், அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனியாக தனது BMW K1600 GT மோட்டார் சைக்கிளில் பயணத்தைத் தொடங்கியுள்ளார் சத்குரு (ஜக்கி வாசுதேவ்). இந்த மோட்டார் சைக்கிள் பயணம் அடுத்த 100 நாள்களுக்கு 3 கண்டங்கள் 27 நாடுகளுக்கு சுமார் 30,000 கி.மீ பயணம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணத்தை நேற்று (மார்ச் 21) லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ட்ரஃபல்கர் சதுக்கத்தில் 7 வயதுச் சிறுமி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சத்குரு, ‘அடுத்த 100 நாள்களுக்கு, உலகம் ஒரே நோக்கத்துடன் ஒரே ஆற்றலுடன் எதிரொலிக்க வேண்டும்: #SaveSoil. இதைச் செய்ய நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிறிய அடிக்கும், நான் உங்களுடன் இருப்பேன்’ எனப் பதிவிட்டிட்டிருந்தார்.
லண்டனிலிருந்து புறப்பட்ட சத்குரு இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக சுமார் 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் பயணித்து இந்தியா திரும்ப உள்ளார். இப்பயணத்தில் அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எனப் பல தரப்பட்ட பிரபலங்களுடன் மண் வளப் பாதுகாப்பு குறித்துக் கலந்துரையாட உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், அந்தந்த நாடுகளில் உள்ள முன்னணி ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
